பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி


பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 13 March 2022 9:21 PM IST (Updated: 13 March 2022 9:21 PM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலியானார். இதையடுத்து லாரியின் கண்ணாடியை கிராம மக்கள் அடித்து நொறுக்கினர்.

லாரி மோதியது

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த மாதவரம் முஸ்லிம் நகரை சேர்ந்தவர் ஆபித் (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் முனீர் (21). இவர்கள் இருவரும் சோழவரம் பகுதியில் உள்ள ஜனப்பன் சத்திரம் கூட்டு சாலை பஜாரில் கறி கடையில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். முஸ்லிம் நகர் அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

வாலிபர் பலி

இதில் ஆபித் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக பலியானார். இவருடன் வந்த முனீர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த முஸ்லீம் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிரை பறித்த லாரியின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். லாரியை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடி தலைமறைவானார். இதனால் பொன்னேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து அரை மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் பலியாகிக் கிடந்த ஆபித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story