தனியார் எஸ்டேட்டில் பயங்கர காட்டுத்தீ


தனியார் எஸ்டேட்டில் பயங்கர காட்டுத்தீ
x
தினத்தந்தி 13 March 2022 9:52 PM IST (Updated: 13 March 2022 9:52 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே தனியார் எஸ்டேட்டில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.

வால்பாறை

வால்பாறை அருகே தனியார் எஸ்டேட்டில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.

பயங்கர காட்டுத்தீ

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. அதனை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் காணப்படுகின்றன. தற்போது வால்பாறையில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தேயிலை தோட்டங்கள், வனப்பகுதிகள் பசுமையை இழந்து காணப்படுகின்றன. 

இதன் காரணமாக காட்டுத்தீ பரவும் அபாயம் நிலவுகிறது. இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள ஒரு தனியார் எஸ்டேட் பகுதியில் இன்று மதியம் 1 மணியளவில் திடீரென காட்டுத்தீ பரவியது. ஏற்கனவே மரம், செடி, கொடி காய்ந்து இருந்ததால் தீ மள மளவென பரவி பயங்கரமாக கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியே கடும் புகைமூட்டமாக காட்சி அளித்தது.

தொழிலாளர்கள் குடியிருப்பு

இதை கண்ட எஸ்டேட் நிர்வாகத்தினர் உடனடியாக வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதலில் அருகில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு காட்டுத்தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் அந்த குடியிருப்பு செல்லும் நடைபாதைக்கு அருகிலேயே தீ பரவியது. இதனால் அந்த வழியாக நடந்து சென்றவர்களை தீயில் சிக்கிவிடாமல் பாதுகாப்பாக வனத்துறையினர் அனுப்பி வைத்தனர். 

எரிந்து நாசம்

இதையடுத்து எஸ்டேட் தொழிலாளர்கள் ஒரு பக்கத்தில் இருந்தும், வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் மற்றொரு பக்கத்தில் இருந்தும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு மாலை 4 மணிக்கு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. 

இதில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவிலான மரம், செடி, கொடி எரிந்து நாசமானது. வறட்சி நிலவுவதால் வால்பாறை பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் வாகனங்களில் செல்லும்போது பீடி, சிகரெட் புகைப்பதையும், சாலையோரத்தில் அமர்ந்து உணவு சமைப்பதையும் தவிர்க்க வேண்டும். காட்டுத்தீயை தடுக்க எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story