வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். ஒரு சில சுற்றுலா பயணிகள் ஆபத்தையும் உணராமல் பாறை மீது ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட விடுமுறை தினங்களில் மாமல்லபுரத்திற்கு தற்போது உள்நாட்டு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
கடல் சீற்றம்
கடற்கரை கோவிலின் தென் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் பலமுறை அறிவுறுத்தியும் பலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்ததை காண முடிந்தது. நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. குறிப்பாக கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட தங்கள் பெற்றோர்களுடன் வந்திருந்த சிறுவர், சிறுமிகளும் பலர் கடலில் மகிழ்ச்சியுடன் குளித்து கொண்டிருந்ததை காண முடிந்தது.
குறிப்பாக மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு அருகில் உள்ள பாறைகள் மீது ஏறி ஆபத்தை உணராமல் காதல் ஜோடிகள் பலரும், சுற்றுலா வந்த வாலிபர்கள் பலரும் செல்பி எடுத்து கொண்டிருந்ததை காண முடிந்தது. பாறை உள்ள பகுதிக்கு செல்லாதீர்கள் என்று போலீசார் அவர்களை பல முறை எச்சரித்தும் அதனை கருத்தில் கொள்ளாமல் அலட்சிய போக்குடன் செல்பி மோகத்தில் பலர் மணிக்கணக்கில் பாறை மீது நின்று விதவிதமான கோணங்களில் செல்பி எடுத்து கொண்டிருந்தனர்.
மேலும் பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் கடும் நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்துசென்றன.
Related Tags :
Next Story






