சட்டம், ஒழுங்கை பேணி காக்க ரவுடிகள் மீது நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: போலீஸ் டி.ஜி.பி


சட்டம், ஒழுங்கை பேணி காக்க ரவுடிகள் மீது நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: போலீஸ் டி.ஜி.பி
x

சட்டம், ஒழுங்கை பேணி காக்க ரவுடிகள் மீது நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு காஞ்சீபுரத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பேசினார்.

ஆய்வு கூட்டம்

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பங்கேற்கும் ஆய்வு கூட்டம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக காஞ்சீபுரத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு வருகை தந்தார். அவரை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் மாவட்ட போலீஸ் துறை சார்பாக நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி சந்தோஷ் குமார், காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சட்டம், ஒழுங்கை பேணி காக்க

கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசியதாவது:-

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கை பேணி காக்க ரவுடிகள் மீது நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

காஞ்சீபுரம் சரகத்தில் போதைப்பொருள் கடத்தல், சட்டம் ஒழுங்கை பேணிக்காத்தல் மற்றும் சவாலான குற்ற வழக்குகளில் தீவிர முயற்சி எடுத்து கண்டுபிடித்தல் போன்ற பணிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் நற்செயலாற்றிய 10 குழுக்களை சேர்ந்த சிறந்த போலீசாருக்கு ரோக்க வெகுமதி அளித்து பாராட்டினார்.


Next Story