மண்ணிவாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலர் ஆய்வு
மண்ணிவாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலர் அமுதா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2-ன் கீழ் பல்வேறு கிராம ஊராட்சிகளில் பழுதடைந்த நூலக கட்டிடங்கள் பழுதுபார்க்கும் பணி நடைபெற உள்ளது. இந்த நிலையில் மண்ணிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்று வரும் நூலக கட்டிடங்கள் பழுது பார்க்கும் பணியை நேற்று திடீரென ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறையின் முதன்மை செயலர் அமுதா நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் செல்வகுமாரிடம் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பழுதடைந்த நூலக கட்டிட விவரங்களை கேட்டறிந்தார். மேலும் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் பழுது பார்க்கப்படும் நூலகங்கள் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், சாய் கிருஷ்ணன் ஆகியோருக்கு ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலர் அமுதா உத்தரவிட்டார்.
ஆய்வின் போது காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றியகுழு துணைத்தலைவர் ஆராமுதன், மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி சண்முகம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுமதி லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம், உதவி செயற்பொறியாளர் விக்டர் அமிர்தராஜ், ஊராட்சி மன்ற செயலர் டி.ராமபக்தன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story