ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை


ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 17 March 2022 10:10 PM IST (Updated: 17 March 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.

கோவை

கோவையில் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

22 வயது இளம்பெண்

திருவண்ணாமலையை சேர்ந்த 22 வயது இளம்பெண், கோவையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து, போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இதற்கிடையில் சொந்த ஊருக்கு சென்ற அந்த இளம்பெண், மீண்டும் கோவைக்கு வர முடிவு செய்தார். 

அதன்படி கடந்த 16-ந் தேதி இரவில் திருவண்ணாமலையில் இருந்து சேலத்துக்கு வந்தார். அங்கிருந்து அரசு பஸ்சில் கோவைக்கு புறப்பட்டார். அந்த பஸ்சில் கண்டக்டராக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலத்தை சேர்ந்த பூவேந்திரன்(வயது 31) பணியாற்றினார்.

பாலியல் தொல்லை

இந்த நிலையில் அவர், அந்த இளம்பெண் அமர்ந்து இருந்த இருக்கைக்கு முன்பு உள்ள இருக்கையில் அமர்ந்துகொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், அவரை கண்டித்தார். 

ஆனாலும் அவர் பாலியல் சீண்டலை தொடர்ந்தார். கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே வந்ததும், பாலியல் தொல்லையை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த இளம்பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பின்னர் சக பயணிகள், அவரிடம் விசாரித்தனர். அப்போது கண்டக்டர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி கதறி அழுதார். மேலும் அவரை தாக்கினார்.

கண்டக்டர் கைது

இதையடுத்து காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்துக்கு வந்ததும் சக பயணிகள் உதவியுடன் கண்டக்டர் பூவேந்திரனை காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு இளம்பெண் அழைத்து சென்றார். அங்கு நடந்த விசாரணையில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின்பேரில் பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சித்தல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பூவேந்திரனை கைது செய்தனர். 

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான கண்டக்டர் பூவேந்திரனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 வயதில் ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு, அரசு கண்டக்டர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story