கோவை அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்

ஹிஜாப் விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவை திரும்ப பெறக்கோரி கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை
ஹிஜாப் விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவை திரும்ப பெறக்கோரி கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹிஜாப் விவகாரம்
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று ஜகோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும் ஹிஜாப் அணிவது முஸ்லிம் மதத்தில் அத்தியாவசியமாக பின்பற்றப்படும் நிகழ்வு அல்ல. குரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை. சீருடை குறித்து உத்தரவிடும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்று கருத்து தெரிவித்தது.
இந்த தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய அனுமதிக்க கோரியும் கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் அமைப்பினர் மற்றும் மாணவ-மாணவிகள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவர்களுக்கு ஆதரவாகவும், ஹிஜாப் விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் கோவை அரசு கலைக்கல்லூரியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷமிட்டதால் பரபரப்பு
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக ஜகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை நிராகரிக்கிறோம். மத நம்பிக்கை சார்ந்த நிகழ்வுகளில் கோர்ட்டு மற்றும் அரசு தலையிடக்கூடாது. ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை. இந்த தீர்ப்பு காரணமாக பல முஸ்லிம் மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு செல்வது தடைபடும். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம் உள்பட சிறுபான்மையினர் மீதான விரோத போக்கு அதிகரித்து வருகிறது. எனவே கர்நாடக ஜகோர்ட்டு இந்த தீர்ப்பை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தின்போது ஹிஜாப் அணிவது எங்களது உரிமை என்ற பதாகைகளை கையில் ஏந்தியவாறு பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story






