வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு ஜெயில் - சென்னை மகளிர் கோர்ட்டு
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சென்னை மதுரவாயல் ஏரிக்கரை தனலட்சுமிநகரைச் சேர்ந்தவர் மதன்குமார் (வயது 32). இவருக்கும் வேளச்சேரியைச் சேர்ந்த செல்வியம்மாள் (23) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்பு மதன்குமார் வேலைக்கு செல்லாமல் வரதட்சணை கேட்டு செல்வியம்மாளை கொடுமைப்படுத்தி உள்ளார்.
இதில் மனம் உடைந்த செல்வியம்மாள், 2015-ம் ஆண்டு தனது பெற்றோர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இதுகுறித்து கிண்டி போலீசார் விசாரணை நடத்தி மதன்குமார், அவரது தந்தை சடகோபன், தாயார் செந்தாமரை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்து வந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஆரத்தி ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, மதன்குமார் உள்ளிட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி மதன்குமாருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதமும், சடகோபன், செந்தாமரை ஆகியோருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை, தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
அபாரத தொகையில், ரூ.20 ஆயிரத்தை செல்வியம்மாளின் தாய் சாந்திக்கு இழப்பீடாக வழங்கவும், கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story