திருத்தணி அருகே பரபரப்பு: அரசு பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு திடீர் வாந்தி-மயக்கம்


திருத்தணி அருகே பரபரப்பு: அரசு பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு திடீர் வாந்தி-மயக்கம்
x
தினத்தந்தி 19 March 2022 3:09 PM IST (Updated: 19 March 2022 3:09 PM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே அரசு பள்ளியில் பயிலும் 10 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்தணி,  

திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு ஒன்றியம், பொன்பாடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை 26 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் குடற்புழுநீக்க மாத்திரைகள் வழங்கு வாரத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு பூனி மாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வந்த செவிலியர்கள் குடற்புழுநீக்க மாத்திரைகளை வழங்கியுள்ளனர். இதனை உட்கொண்ட மாணவிகளான தீபிகா, காவியா, யோகலட்சுமி, செஞ்சியம்மா, உமாமகேஸ்வரி, சஞ்சனா, குணஸ்ரீ, மாணவன் அரிகிருஷ்ணன், புவனேஸ்வரி, நரசிம்மன் ஆகிய 10 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக பூனி மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை இணை இயக்குனர் இளங்கோவன் மாணவ, மாணவிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். குடற்புழு நீக்க மாத்திரைகள் சாப்பிட்டதால் வாந்தி ஏற்பட்டதா? அல்லது மதிய உணவு சாப்பிட்டதால் ஏற்பட்ட வாந்தியா? என்பது குறித்து இரத்த மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி ஆய்வு செய்த பிறகே தெரியவரும் என அவர் தெரிவித்தார்.

அரசு சார்பில் மாணவ மாணவிகளுக்கு வழங்கிய குடற்புழு நீக்க மருந்து மாத்திரையை சாப்பிட்ட 10 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story