ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
வேலூர் மாவட்டம் கீழ் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 25). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். சீனிவாசன் நேற்று வேலை முடித்துவிட்டு வல்லம் சிப்காட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் சீனிவாசன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சீனிவாசன் தூக்கி வீசபட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story