மாமல்லபுரம் திடக்கழிவு மைய வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றம்; பேரூராட்சி நடவடிக்கை

மாமல்லபுரம் திடக்கழிவு மைய வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் பக்கிங்காம் கால்வாய் ஒட்டியுள்ள இடத்தில் மாமல்லபுரம் பேரூராட்சியின் திடக்கழிவு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாமல்லபுரம் நகர பகுதியில் சேகரிக்கப்படும் உணவு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளின் குப்பைகள் கொட்டப்பட்டு, அங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்படுவது வழக்கம். இறுதியில் தரம்பிரிக்கப்பட்ட எதற்கும் பயன்படாத குப்பைகள் அங்குள்ள காலி மைதானத்தில் மலைபோல் குவிந்து காணப்பட்டது.
இந்தநிலையில் அங்குள்ள குடியிருப்புவாசிகள் சிலர் குப்பைகள் அங்கு கொட்டப்படுவதால் தாங்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாவதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு அங்கு நேரில் சென்று பார்வையிட்டு உண்மை தன்மையை ஆய்வு செய்து கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட்டு சார்பில் ஒரு ஆணையரை நியமித்து ஒரு குழுவை அனுப்பி வைத்தது.
மாமல்லபுரம் வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அந்த குழுவினர் இதுகுறித்து அறிக்கை தயாரித்து கோர்ட்டில் சமர்பித்தனர். கோர்ட்டு இந்த பிரச்சினை குறித்து வழக்கு விசாரணையில் இருப்பதால் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் சேகரித்து வைக்கப்பட்ட எதற்கும் பயன்படாத குப்பைகளை அகற்ற மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் துணைத்தலைவர் ராகவன் ஆகியோரின் மேற்பார்வையில் திடக்கழிவு வளாக மையத்தில் மலைபோல் குவிந்து டன் கணக்கில் உள்ள குப்பைகள் 10 லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் ஒரகடம் அருகில் உள்ள ஆப்பூர் குப்பை கிடங்குக்கு எடுத்து செல்லப்படுகிறது.
Related Tags :
Next Story