மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான ஆணழகன் போட்டி
மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான ஆணழகன் போட்டியில் சென்னையை சேர்ந்த அஸ்வினிசவுத்ரி என்பவர் ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டு சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை துரைப்பாக்கம் டி.என்.ஏ. உடற்பயிற்சி மையம் சார்பில் தேசிய அளவிலான ஆணழகன் போட்டி மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆணழகன் போட்டி ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமை தாங்கினார். 60, 65, 70, 75, 80 கிலோ எடை பிரிவுகளின் கீழ் 5 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த ஆணழகன் போட்டியில் தமிழ்நாடு, டெல்லி, உத்தரபிரதேசம், மராட்டியம், அசாம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, சிக்கிம், புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த 300 பேர் கலந்து கொண்டு, பலவித கோணங்களில் உடற்பயிற்சி செய்து அசத்தினர்.
குறிப்பாக இந்த போட்டியில் கலந்து கொண்ட தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி நகரத்தை சேர்ந்த கால் ஊனமுற்ற முருகன் (வயது 37) என்ற மாற்றுத்திறனாளி தன் கால்தான் ஊனம் என்றாலும், தன் உடலிலும், மனதிலும் வலிமையும், தன்னம்பிக்கையும் இருக்கிறது என்ற கூற்றினை நிரூபிக்கும் வகையில் மேடை மீது தவழ்ந்து சென்று உடற்பயிற்சி செய்து அங்கு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் அவரது திறமையையும், தன்னம்பிக்கையையும் பார்த்து ரசித்து கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர். அவருக்கு விழாக்குழுவினர் பரிசு, சான்றிதழுடன் ரூ.15 ஆயிரம் சன்மானமும் வழங்கி அவரது திறமையை பாராட்டினர். மேலும் 5 சுற்றுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்று இறுதி போட்டியில் சென்னையை சேர்ந்த அஸ்வினிசவுத்ரி என்பவர் ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டு சாம்பியன் பட்டம் வென்றார்.
பெண்கள் பிரிவில் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மராட்டியம் மாநிலங்களை சேர்ந்த 3 பெண்கள் கலந்து கொண்டனர். ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் மாமல்லபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் ராகவன் பரிசும், சான்றிதழும் வழங்கினார். நிகழ்ச்சியில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தமிழ்நாடு உடற்பயிற்சி சங்க செயலாளர் மோகன்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story