வண்டலூரில் மரக்கன்றுகள் நடும் விழா


வண்டலூரில் மரக்கன்றுகள் நடும் விழா
x
தினத்தந்தி 22 March 2022 6:22 PM IST (Updated: 22 March 2022 6:22 PM IST)
t-max-icont-min-icon

வண்டலூரில் உள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவன (ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கல்வி) மையத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் உலக வன நாள் கொண்டாடப்பட்டது. வனத்துறையின் மூத்த அதிகாரிகளால் உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவன வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இதற்கு தமிழ்நாடு வனத்துறை சார்பில் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவன கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குனர் சேவா சிங், உயர்நிலை வள உயிரின பாதுகாப்பு நிறுவன பூங்கா துணை இயக்குனர் டாக்டர் காஞ்சனா, வன உயிரின காப்பாளர் பிரசாந்த் மற்றும் மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர். மூத்த அலுவலர்கள் காடுகளின் முக்கியத்துவம் குறித்தும், வன சுற்றுச்சூழல் அமைப்புகளின் பங்கை பற்றியும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாநிலத்தின் தற்போதைய பல்லுயிர் தன்மையின் வளர்ச்சி பற்றியும் அதற்காக தமிழ்நாடு அரசு மாநில வனபரப்பின் 33 சதவீதத்தை அடைவத்தற்காக 762 கோடி மரக்கன்று விதைகள் 10 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் நடுவதன் மூலம் 2.8 சதவீத வனபரப்பை அதிகரிக்க எடுத்துவரும் நடவடிக்கைகளை பற்றியும் மாணவர்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினர். மேலும் வன மேலாண்மையில் தனி நபர் மரம் நடுவதன் முக்கியவத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன் பின்னர் உலக வன நாள், உலக சிட்டுக்குருவி தினம், தவளை தினத்தினை நினைவு கூறும்பொருட்டு ஒரு நாள் கருத்தரங்கு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு வளங்களை காப்பதற்கான முக்கியத்துவத்தை குறித்து அறிந்துகொண்டனர். மேலும் இந்தநிகழ்ச்சியில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மைய முன்னாள் இயக்குனர் டாக்டர் சங்கர், சென்னை கிண்டி பாம்பு பண்ணை டாக்டர் கணேஷ், ஆகியோர் கலந்து கொண்டு உள்நாட்டு பறவைகளின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவத்தை குறித்து கருத்துரையாற்றினர்.

இந்த தகவல் வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story