வால்பாறையில் பலத்த மழை


வால்பாறையில் பலத்த மழை
x
தினத்தந்தி 23 March 2022 11:22 PM IST (Updated: 23 March 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வால்பாறை

வால்பாறையில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பலத்த மழை

வால்பாறை பகுதியில் கோடைக்காலம் தொடங்கியதையொட்டி கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. இதனால் ஆறுகள், ஒடைகளில் தண்ணீர் இன்றி வறண்டு போனது. மேலும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் அணைகளான சோலையாறு, நீரார் அணைகளிலும் தண்ணீர் குறைய தொடங்கியது. இதனால் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கிடையில், கடுமையான வெயிலில் தேயிலை செடிகள் கருகி பச்சை தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 3 மணியளவில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இந்த மழை 5.30 மணி வரை நீடித்தது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

வால்பாறையில் பெய்த பலத்த மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை உருவானது. மேலும் தாழ்வான சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

 கடுமையான வெயிலால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தநிலையில், நேற்று பெய்த திடீர் மழையால் தேயிலை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இரவு வரை வால்பாறை பகுதி முழுவதும் மேகம் சூழ்ந்து இருந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்றதை காண முடிந்தது.

Next Story