குரங்கு நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரிப்பு


குரங்கு நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 March 2022 11:23 PM IST (Updated: 23 March 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி, ஆழியாறில் பலத்த மழை பெய்ததால் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, ஆழியாறில் பலத்த மழை பெய்ததால் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

பலத்த மழை

தென்மேற்கு, வடகிழக்கு பருவழையின் காரணமாக பி.ஏ.பி. திட்ட அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகள் மற்றும் தொகுப்பு அணைகள் நிரம்பின. அதன்பிறகு மழை பொழிவு குறைந்ததால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.  குரங்கு நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்து பாறையாக காட்சி அளித்தது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்தது. இதற்கிடையில் பகல் 2 மணிக்கு பிறகு ஆழியாறு, கோட்டூர் பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதை தொடர்ந்து திடீரென்று கன மழை பெய்ய தொடங்கியது. 

சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாது மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வறண்டு கிடந்த குரங்கு நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து அதிகரித்தது. இதற்கிடையில் தடை உத்தரவு அமலில் இருப்பதால் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

குரங்கு நீர்வீழ்ச்சி

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், நீர்வரத்து குறைந்ததால் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது பெய்த மழையினால் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இருப்பினும் தொடர்ந்து நீர்வரத்து வருவதை உறுதி செய்த பிறகே சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றனர்.

இதேபோன்று பொள்ளாச்சி பகுதிகளில் மாலை 3 மணிக்கு பிறகு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையின் நனைப்படி சென்றனர். 

மேலும் பல்லடம் ரோட்டில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். மேலும் மழையின் காரணமாக வெப்ப சலனம் குறைந்து குளிச்சியான காலநிலைக்கு மாறியது. நீண்ட நாட்களுக்கு மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story