இந்து முன்னணி பிரமுகர் தற்கொலை முயற்சி


இந்து முன்னணி பிரமுகர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 24 March 2022 10:17 PM IST (Updated: 24 March 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திட்டியதாக கூறி இந்து முன்னணி பிரமுகர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திட்டியதாக கூறி இந்து முன்னணி பிரமுகர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் நவீன் (வயது 27). இந்து முன்னணி நிர்வாகி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் தனது வீட்டின் முன் பிறந்தநாள் கொண்டாடி உள்ளார். பின்னர் அவர், தனது நண்பர்களுடன் அங்குள்ள கோவில் முன் நின்று கொண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போதுஅந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ரோந்து  வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கோவில் முன் இளைஞர்கள் கூட்டமாக நிற்பதை கண்டு அங்கிருந்தவர்களிடம் இரவு நேரத்தில் இந்த இடத்தில் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது அவர்கள் தங்களது வீடுகள் அருகே தான் உள்ளது. நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்

இதையடுத்து அந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், அந்த வாலிபர்களை வீட்டிற்கு செல்லும்படி சத்தம் போட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். 

இதனிடையே இந்து முன்னணி பிரமுகர் நவீன் மாரி படத்தில் நடிகர் தனுஷ் போலீஸ் ஒருவரை பார்த்து இந்த ஏரியா உடன் கண்ட்ரோலில் இருக்கலாம், ஆனால் நான் அவுட் ஆப் கண்ட்ரோல் என்று வசனம் பேசுவார். இந்த காட்சியை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்த நவீன், அதில் இது புதிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு ஒரு நபர் தகவல் தெரிவித்து உள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அவர், உடனே இந்து முன்னணி பிரமுகரை செல்போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

 மேலும் கைது செய்து, சிறையில் தள்ளி விடுவதாக அவர் கூறியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன நவீன், வீட்டில் இருந்த சாணி பவுடரை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story