தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
வீணாகும் குடிநீர்
பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி கே.ஆர்.ஜி.பி. நகர், சுப்பையன் நகர் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. கே.ஆர்.ஜி.பி. நகரில் சாலையோரத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாட்களாக குடிநீர் வீணாகி கொண்டிருக்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாகுவதை தடுக்க வேண்டும்.
செந்தில், பொள்ளாச்சி.
சுகாதார சீர்கேடு
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நகராட்சி சர்க்கஸ் மைதானம் அருகில் குப்பைகள், இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் இறைச்சி கழிவுகளை சாப்பிட நாய்கள் சண்டை போடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரகாஷ், மகாலிங்கபுரம்.
குளத்தில் கொட்டப்படும் கழிவுகள்
பொள்ளாச்சியில் இருந்து ஜமீன் ஊத்துக்குளி செல்லும் வழியில் கிருஷ்ணாகுளம் உள்ளது. இந்த குளத்தின் முன்புறம் கட்டிட கழிவுகள், கோழி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இரவு நேரத்தில் மர்ம ஆசாமிகள் வந்து கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், குளத்தில் உள்ள தண்ணீரும் மாசு ஏற்படும் நிலை நீடித்து வருகிறது. எனவே அங்கு கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றுவதுடன், கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், பொள்ளாச்சி.
ஓட்டை விழுந்த தண்ணீர் தொட்டி
வால்பாறையில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் தங்கி உள்ள சுற்றுலா இல்லம் முன்பு குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் ஓட்டை விழுந்து உள்ளதால் குடிநீர் வீணாகி வருகிறது. குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நேரத்தில் இதுபோன்று தண்ணீர் வீணாகி செல்வது அதிர்ச்சியடைய செய்து உள்ளது. எனவே அந்த குடிநீர் தொட்டியை சரிசெய்ய வேண்டும்.
தனபாண்டியன், வால்பாறை.
சாலையில் குவிந்துள்ள மண்
கோவையை அடுத்த குறிச்சி சிட்கோ பகுதியில் ஏராளமான தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த சாலையில் ஓரத்தில் அதிகளவில் மண் குவிந்து கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே பெரியளவில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு இங்கு குவிந்துள்ள மண்ணை அகற்ற வேண்டும்.
சகாயராஜ், குறிச்சி.
குடிநீர் வருவது இல்லை
சூலூர் உள்ள புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அதுபோன்று குடிநீர் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் குழாய்களில் தண்ணீர் வருவது இல்லை. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இங்கு வரும் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் கடையில் விலைக்கு வாங்கக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பஸ்நிலையத்தில் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
மனோஜ், சூலூர்.
அடிக்கடி மின்தடை
கோவை கு.வடமதுரைக்கு உட்பட்ட தொப்பம்பட்டி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. தினமும் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மின்தடை காரணமாக முதியவர்கள், குழந்தைகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதிக்கு சீரான மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும்.
ஜெகநாதன், தொப்பம்பட்டி.
நிழற்குடை இல்லை
கோவை அருகே உள்ள சாவடியில் இருந்து வேலந்தாவளம் செல்லும் சாலையில் நிழற்குடை இல்லை. இதனால் இங்கு பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் கால்கடுக்க காத்திருக்கும் நிலை நீடித்து வருகிறார்கள். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒதுங்கி நிற்க அருகில் உள்ள கடைகளை தேடி ஓடும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து உடனடியாக இங்கு நிழற்குடை வசதி செய்து கொடுக்க வேண்டும்.
குமார், ரங்கசமுத்திரம்.
Related Tags :
Next Story