சுவர் இடிந்து 5 வயது சிறுமி பலி
தொண்டாமுத்தூர் அருகே கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து 5 வயது சிறுமி பலியானாள். படுகாயம் அடைந்த மற்றொரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பேரூர்
தொண்டாமுத்தூர் அருகே கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து 5 வயது சிறுமி பலியானாள். படுகாயம் அடைந்த மற்றொரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வீடு கட்டும் பணி
கோவை தொண்டாமுத்தூர் அருகே போளுவாம்பட்டி ரோடு திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் பாபு(வயது 42). இவர் தனக்கு சொந்தமான 6 சென்ட் நிலத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். இதற்கான ஒப்பந்தம் துடியலூரை சேர்ந்த மேஸ்திரி கருப்புசாமி(50) என்பவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் அந்த கட்டுமான பணியில் தடாகம்ரோடு கோவில்மேட்டில் வசிக்கும் சின்னதம்பி(60), ஜோதி(56), பவித்ரா(30), முல்லை(45) ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர். அங்கு சின்னதம்பியின் பேத்தி சன்சிகா(5), முல்லையின் பேத்தி தேவசேனா(7) ஆகியோரும் வந்திருந்தனர்.
சிறுமி சாவு
இதற்கிடையில் அங்கு ஹாலோ பிளாக் கல் மூலம் சுவர் அமைக்கும் பணி நடந்தது. மேலும் அதனருகில் தொட்டி கட்ட 4 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டு இருந்தது. அங்கு சன்சிகா, தேவசேனா ஆகிய 2 சிறுமிகளும் விளையாடி கொண்டு இருந்தனர்.
பின்னர் மாலை 4.30 மணியளவில் ஈரம் காயாமல் இருந்ததாலும், அருகில் குழி தோண்டப்பட்டதாலும் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சன்சிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். தேவசேனா பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினாள்.
தீவிர சிகிச்சை
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவளை மீட்டு தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த பேரூர் தாசில்தார் ஷர்மிளா, வருவாய் ஆய்வாளர் வெங்கடேஷ் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story