வால்பாறையில் அங்கன்வாடி மைய கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்
வால்பாறையில் அங்கன்வாடி மைய கட்டிடங்களை சீரமைத்து தரவேண்டும் என்று கருத்தரங்கில் நகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வால்பாறை
வால்பாறையில் அங்கன்வாடி மைய கட்டிடங்களை சீரமைத்து தரவேண்டும் என்று கருத்தரங்கில் நகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கருத்தரங்கு
வால்பாறையில் தனியார் திருமண மண்டபத்தில் வால்பாறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அங்கன்வாடி மையம் சார்பில் நகராட்சி கவுன்சிலர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதையடுத்து வார்டு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து அந்தந்த அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வார்டு கவுன்சிலர்கள் செய்து தரவேண்டும்.
வார்டு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் கட்டிடங்களை சீரமைத்து தரவேண்டும். அங்கன்வாடி மையங்களை சுற்றி காய்கறி மற்றும் மூலிகை செடி தோட்டங்கள் அமைப்பதற்கும் கவுன்சிலர்கள் உதவ வேண்டும் என்று கருத்தரங்கில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
கட்டிடம் கட்ட வேண்டும்
வால்பாறை பகுதியில் 42 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் வால்பாறையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அங்கன்வாடிக்கென தனியாக அலுவலக கட்டிடம் இல்லாமல் இருந்து வருகிறது. எனவே அங்கன்வாடி பணியாளர்களுக்கென தனிகட்டிடம் கட்டித்தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எங்களது பணிகளில் அந்தந்த நகராட்சி கவுன்சிலர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. கருத்தரங்கிற்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். 4-வது வார்டு கவுன்சிலர் பாஸ்கர், திட்ட அலுவலர் சாந்தி மேற்பார்வையாளர் நாகஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டச்சத்து கண்காட்சி
இந்த கருத்தரங்கில் கவுன்சிலர்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் என மொத்தம் 50 பேருக்கு ரூ.100 வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அங்கன்வாடி மைய பணியாளர்களர்களிடம் கேட்டபோது எங்கள் துறையின் சார்பில் கவுன்சிலர்களுக்கும் அவர்களுடன் வரக்கூடியவர்களுக்கு இந்த தொகையை வழங்க வேண்டும் என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதனால் தான் ரூ.100 வழங்கினோம் என்றனர்.
இதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து கண்காட்சி நடைபெற்றது.
Related Tags :
Next Story