தேவதானப்பட்டி அருகே கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தேவதானப்பட்டி அருகே கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே செங்குளம் கண்மாயில் தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். மேலும் கண்மாய் வரத்துக்கால்வாய்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனால் கண்மாய்க்கு நீர்வரத்து தடைபட்டது. பருவமழை அவ்வப்போது கைக்கொடுத்த போதிலும் ஆக்கிரமிப்பால் செங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் குறைவான அளவே வந்தது.
இதனால் செங்குளம் பாசன விவசாயிகள் சங்கத்தினர், கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அப்போது மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செங்குளம் கண்மாய் மற்றும் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இதற்கிடையே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி, செங்குளம் கண்மாயில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கண்மாய் இடத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு மற்றும் கொய்யா மரங்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.
மேலும் தென்னை மரங்கள் கையகப்படுத்தப்பட்டன. மஞ்சளாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் ரமேஷ், பெரியகுளம் தாசில்தார் ராணி, உதவி பொறியாளர் சேகரன் ஆகியோர் முன்னிலையில் இந்த பணி நடைபெற்றது.
Related Tags :
Next Story