தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
போக்குவரத்துக்கு இடையூறு
கோத்தகிரி தாசில்தார் அலுவலகம், கோர்ட்டுக்கு செல்லும் குறுகிய சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தாமல் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஸ்கரன், கோத்தகிரி.
இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்
சோமனூர் நொய்யல் ஆற்றுப்பாலம் அருகே இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதுடன் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு இறைச்சி கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
அருண், சோமனூர்.
மீண்டும் பஸ் சேவை வேண்டும்
உக்கடத்தில் இருந்து நீலாம்பூருக்கு இயக்கப்படும் ‘42 ஏ’ என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சை பள்ளி மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 6 மாதங்களாக அந்த பஸ் சேவை திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினேஷ், அத்தப்பகவுண்டன்புதூர்.
குடிநீர் வரவில்லை
கோவை பீளமேடு கவுதமபுரி நகரில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். மேலும் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. அத்துடன் சிலர் காலிக்குடங்களுடன் குடிநீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வழங்க வேண்டும்.
சுப்ரமணியம், பீளமேடு.
பட்டுப்போன மரத்தால் அச்சம்
கோவை-பாலக்காடு மெயின்ரோட்டில் குனியமுத்தூர் பகுதியில் பட்டுப் போன மரம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படும் முன், அந்த மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வக்குமார், குனியமுத்தூர்.
குண்டும், குழியுமான சாலை
கருமத்தம்பட்டி அருகே சேடபாளையம் சாலை மற்றும் எலச்சிபாளையம் சாலை ஆகியவற்றை இணைக்கும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அங்கு மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கி கிடப்பதால், அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் விபத்துகள் அதிகரிக்கும் அபாயமும் நிலவுகிறது. எனவே அந்த சாலையை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்கடாசலம், சோமனூர்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பரமேஸ்வரன் லே-அவுட் பகுதியில் குப்பை தொட்டிகள் நிறைந்து சாலையோரம் குப்பை கிடக்கிறது. அவை காற்றில் பறந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் செல்கின்றன. இதனால் அங்கு அதிகளவில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி யடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
ராமன், கோவை.
தெருநாய்கள் தொல்லை
பொள்ளாச்சி-உடுமலை மெயின் ரோட்டில் தேர் நிலையம் உள்ளது. இங்கு கடந்த சில வாரங்களாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து உடுமலை, பழனி செல்ல பஸ்சுக்கு காத்து இருக்கும் பயணிகள் மிகவும் அச்சம் அடைகின்றனர். எனவே பயணிகள் அச்சத்தை போக்கும் வகையில் பொள்ளாட்சி நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
செல்வி, பொள்ளாச்சி.
போக்குவரத்து நெரிசல்
கோவை கணபதியில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி அருகருகே உள்ளன. இந்தப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்பு கள் அமைந்து உள்ளன. இந்த பகுதி முழுவதும் ரோட்டில் கடுமையான ஆக்கிரமிப்பு நிலவுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்களை அகற்ற வேண்டும்.
சந்தோஷ், கணபதி.
கடும் துர்நாற்றம்
கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியில் இருந்து மால கோவில் வழியாக செட்டியக்காபாளையம் செல்லும் சாலையில் தனியார் தொழிற் சாலைகள் உள்ளன. இதன் அருகே கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. அந்த வாகனங்களில் தங்கி இருக்கும் டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் சமைத்து சாப்பிட்டு வருவதுடன், கழிவுகளை சாலையில் போடுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேமலையப்பன், கோதவாடி.
Related Tags :
Next Story