நெகமம் பகுதியில் கால்நடைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு


நெகமம் பகுதியில் கால்நடைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு
x
தினத்தந்தி 26 March 2022 7:17 PM IST (Updated: 26 March 2022 7:17 PM IST)
t-max-icont-min-icon

சுட்டெரிக்கும் வெயிலால் விவசாய நிலங்கள் வறண்டதால் நெகமம் பகுதியில் கால்நடைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள்.

நெகமம்

சுட்டெரிக்கும் வெயிலால் விவசாய நிலங்கள் வறண்டதால் நெகமம் பகுதியில் கால்நடைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள். 

கால்நடைகள் வளர்ப்பு

நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடை வளர்ப்பு பழமையான தொழிலாக இருந்தாலும், இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்கள் நலிவடைந்த நிலையில் கூட இந்த தொழில் பல குடும்பங்களை வறுமையில் இருந்து காப்பாற்றியுள்ளது. 
அதனால் கிராமப்புறங்களில் இந்த தொழிலுக்கு கூடுதல் மதிப்பு உள்ளது. இதனை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த தொழிலுக்கு அடிப்படையானது பசுந்தீவனம். 20 ஆண்டுகளுக்கு முன் கிராமம் மற்றும் ஊர் புறங்களில் மண் பாதைகள் அதிகளவில் இருந்தன. 

புற்கள் வளர்ச்சி இல்லை

இதனால் மண்பாதை ஓரங்கள் மற்றும் விவசாய நிலங்களில் வளரும் கொழுக்கட்டை புல், அருகம்புல் மற்றும் இதர செடிகள் அதிகளவில் வளர்ந்து இருக்கும். இது கால்நடைகளுக்கு உணவாகின. விளை நிலங்கள் இல்லாத குடும்பத்தினர் தெருக்கள், கால்வாய் பகுதிகள், திறந்த வெளிகள் கோவில்கள் மற்றும் இதர பகுதியில் வளர்ந்து இருக்கும் புற்களில் கால்நடைகளை மேய்ப்பதன் மூலம் ஓரளவு தீவனத்தேவையை ஈடுகட்டி வந்தனர். ஆனால் தற்போதைய நாட்களில் தெருக்களில் 85 சதவீதம் சிமெண்டு பாதைகளாக மாற்றப்பட்டு உள்ளன. இதனால் கால்நடைகளுக்கான தீவன புற்கள் உற்பத்தி பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பருவ மழைகள் ஏதிர்பாத்த அளவு பெய்யாததால் விளை நிலங்களில் புற்கள் வளர்ச்சி இல்லை. இதனால் தற்போது கால்நடை மேய்ச்சலுக்கு இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

தீவன தட்டுப்பாடு 

இதுகுறித்து கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் விவசாயிகள் கூறியதாவது:-  கிராமங்கள் மற்றும் சிறு ஊர்களின் பல இடங்களில் பரவி வளர்ந்திருந்த புல் கால்நடைகள் வளர தீவனமாகியது. தற்போது இந்த வகை புற்களை காண்பதே அரிதாகி உள்ளது. இதனால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அதையும் கட்டாந்தரையில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டால் அங்குள்ள பிளாஸ்டிக் மற்றும் பேப்பர்களை உண்டு விடுகிறது. இதனால் கால்நடைகளுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் உள்ளது. தற்போது சுட்டெரிக்கும் வெயில் காரணமாக விவசாய நிலங்கள் அனைத்தும் வறண்ட வருகின்றன. இதனால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் கால்நடை வளர்ப்பு என்பது மிகவும் அரிதாகி போகும் நிலை உருவாகி வருகிறது. இது எங்களுக்கு பெருத்த கவலையளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story