வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் போலீஸ் தடியடிகார் உடைப்பு
வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் போலீஸ் தடியடிகார் உடைப்பு
கோவை
வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தல்
கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 8-வார்டுகளை அ.தி.மு.க கைப்பற்றியது. 6 வார்டுகளில் தி.மு.கவும், ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றிபெற்றனர். பெரும்பான்மை பலம் பெற்றதால் அ.தி.மு.க சார்பில் தலைவர் பதவிக்கு மருதாச்சலம், துணைத் தலைவர் பதவிக்கு கணேசனும் போட்டியிட்டனர்.
தி.மு.க.சார்பில் தலைவர் பதவிக்கு கனகராஜ், துணை தலைவர் பதவிக்கு பவித்ராவும் போட்டியிட்டனர்.இந்த தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடந்த கடந்த மாதம் 22-ந்தேதி அன்று அ.தி.மு.க மற்றும் தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைத்து, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஐகோர்ட்டு உத்தரவு
இதற்கிடையே வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மறைமுக தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், "தேர்தல் நடத்த சிறப்பு பார்வையாளரை நியமிக்கவேண்டும். வாக்குப்பதிவை வீடியோவாக எடுக்க வேண்டும்" என கூறப்பட்டு இருந்தது.
மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, வெள்ளலூர் பேரூராட்சி தேர்தலை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. .
போலீஸ் பாதுகாப்பு
இந்தநிலையில் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. காலை 9.30 மணிக்கு கோவை தெற்கு ஆர்.டி.ஓ. இளங்கோவன், தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த அனைத்து சம்பவங்களும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இதற்காக அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் உமா, ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 300-க்கும் அதிகமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனமும் அங்கு கொண்டு வரப்பட்டது.
பேரூராட்சி அலுவலகம் அருகே இருக்கும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அலுவலகத்துக்கு செல்லக்கூடிய சாலைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. அந்த வழியாக வந்தவர்களை தீவிர சோதனை மற்றும் விசாரணைக்கு பின்னரே உள்ளே அனுமதித்தனர்.
போலீஸ் தடியடி
காலை 9 மணிக்கு கவுன்சிலர்கள் அனைவரும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். முதலில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வந்தனர். அவர்களை போலீசார் பாதுகாப்புடன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். தி.மு.க கவுன்சிலர்கள் வந்தபோது அவர்களுடன் தி.மு.க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என பலரும் உள்ளே நுழைய முயன்றனர்.ஆனால் போலீசார் கவுன்சிலர்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர். மற்றவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலரும் உள்ளே நுழைய முயன்றதை அடுத்து போலீசார் தடுத்தனர். இதற்கிடையே தி.மு.கவினர் சிலர், போலீசாரை மீற உள்ளே நுழைய முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். அப்போது மதுக்கரை நகராட்சி 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் குணசுந்தரியின் கணவர் செந்தில்குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ேமலும் தி.மு.க.வை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும் காயம் அடைந்தார்.
கவுன்சிலர் கார் மீது கல்வீச்சு
அவரை உடனடியாக அங்கு நின்றிருந்த ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தி.மு.க.வினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.
இதற்கிடையே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் போலீசார் அ.தி.மு.க.வை சேர்ந்த சிலரை பிடித்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் மிகவும் பதற்றம் நிலவியது.
வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க கவுன்சிலர் மருதாச்சலத்தின் கார் மீது தி.மு.கவினர் கல் வீசினர். இதில் காரின் கண்ணாடி உடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து போலீசார் அங்கிருந்தவர்களை விரட்டியடித்தனர்.
வாக்குச்சீட்டு கிழிப்பு
பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வதற்காக அ.தி.மு.க கவுன்சிலர்கள் ஓட்டு சீட்டை வாங்கி வாக்களிக்க தயாராக இருந்தனர். ஆனால் தி.மு.க. கவுன்சிலர் காளீஸ்வரி என்பவர் தனது ஓட்டு சீட்டை வாங்கி கிழித்து எறிந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பரபரப்பான நிலை காணப்பட்டது. இருந்தாலும் தேர்தலை நடத்தி முடிப்பதில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தினர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இறுதியாக அ.தி.மு.க வேட்பாளர் மருதாச்சலம் 8 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
மாலையில் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் அ.தி.முக வேட்பாளர் கணேசன் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினரும் அந்த பகுதியில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
-
Related Tags :
Next Story