2-வது திருமணம் செய்த கணவர் மீது வழக்கு


2-வது திருமணம் செய்த கணவர் மீது வழக்கு
x
2-வது திருமணம் செய்த கணவர் மீது வழக்கு
தினத்தந்தி 26 March 2022 9:06 PM IST (Updated: 26 March 2022 9:06 PM IST)
t-max-icont-min-icon

2-வது திருமணம் செய்த கணவர் மீது வழக்கு

பேரூர்

சென்னையை சேர்ந்தவர் நித்யா லட்சுமி (வயது 34). இவர் கோவையை அடுத்த பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 2011-ம் ஆண்டு, எனது முதல் கணவரிடம் விவாகரத்து பெற்று, கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (வயது 36) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டேன். அப்போது 15 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரமும் கணவருக்கு கொடுக்கப்பட்டது.

திருமணத்துக்கு பிறகு மலுமிச்சம்பட்டியில் எனது கணவர் மற்றும் அவரது தாயார் அம்சவேணி, தந்தை சக்திவேல் ஆகியோருடன் வசித்து வந்தேன். 
அப்போது விஜயகுமார் என்னை தாக்கி ரூ.1 லட்சம் கேட்டார். அந்த நேரத்தில் நான் கருவுற்று இருந்தேன்.  எனவே கருவை கலைக்குமாறு கூறி எனது கணவர் குடும்பத்தினர் வற்புறுத்தினர். 

அதற்கு நான் மறுப்பு தெரிவித்து விட்டு, சென்னையில் உள்ள எனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். அங்கு எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதை அறிந்த எனது கணவர் விஜயகுமார் குழந்தையை பார்ப்பதற்காக சென்னை வந்து விட்டு கோவை திரும்பி னார். அதன் பிறகு அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை.

இதற்கிடையே ஒரு பெண், என்னை செல்போனில் தொடர்பு கொண்டு எனது கணவரை திருமணம் செய்து கொண்டதாக கூறினார். அதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட எனது கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இது குறித்த புகாரின் பேரில் விஜயகுமார் மீது பேரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story