கோவையில் நாளை மறியல் போராட்டம்
கோவையில் நாளை மறியல் போராட்டம்கோவையில் நாளை மறியல் போராட்டம்
கோவை
இந்தியாவில் தொழிலாளர் சட்ட திருத்தங்கள் மற்றும் மின்சார சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது, தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை (திங்கட்கிழமை), மற்றும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.
இதையொட்டி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து தொழிற்சங்கங்களின் மண்டல மாநாடு கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது.இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து போராட்டம் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்விக்குறி எழுந்தது.
இதுகுறித்து கோவை அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் சார்பில் ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகியும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொழிலாளர்கள் வர்க்கத்தினர் 4 தலைமுறையாய் போராடி பெற்ற சட்ட உரிமைகளை மோடி தலைமையிலான மத்திய அரசு பறித்து விட்டது. 44 ஆக இருந்த தொழிலாளர் நலச்சட்டங்களை வெறும் 4 ஆக குறைத்துள்ளது. வங்கி, இன்சூரன்ஸ், ரெயில்வே சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சிக்கிறது. எனவே நாடு முழுவதும் போராட்டம் நடத்த தொழிற்சங்கங்கள் தயார் நிலையில் உள்ளன.
தமிழக அரசின் தலைமை செயலாளர் அறிக்கையை பொருட்படுத்த வேண்டாம். அது வழக்கமான நடைமுறை தான்.
எனவே கோவை மாவட்டத்தில் இந்த போராட்டம் திட்டமிட்டபடி 10 இடங்களில் வெற்றிகரமாக நடைபெறும். இதையொட்டி ஆட்டோக்கள், பஸ்கள் ஓடாது. தொழிற்சாலைகள், வங்கிகள் உள்ளிட்டவை இயங்காது. இதற்கு முன்னர் நடந்த போராட்டத்தில்நாடு முழுவதும் 24 கோடி போர் பங்கேற்றனர். இந்த முறை நடக்கும் போராட்டத்தில் 40 கோடி பேர் கலந்து கொள்ள உள்ளனர். வருகிற 29-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு நடக்கும் போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






