திருவள்ளூர் அருகே ஆணாக இருந்து திருநங்கையாக மாறியவருக்கு மீண்டும் ஊராட்சி செயலாளர் பணி
திருவள்ளூர் அருகே ஆணாக இருந்து திருநங்கையாக மாறியவருக்கு மீண்டும் ஊராட்சி செயலாளர் பணிஆணையை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
திருவள்ளூரை அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றியம் அன்னம்பேடு ஊராட்சியில், ஊராட்சி செயலாளராக 15-6-2010 அன்று சந்தன்ராஜ் என்பவர் பணி நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வந்தார். அவர் நிர்வாக காரணங்களால் பணி மாறுதலில் கொசவன்பாளையம் ஊராட்சியில் கடந்த 10-2-2015 அன்று ஊராட்சி செயலாளராக பணி அமர்த்தப்பட்டார். பின்னர், அவர் 8-5-2015 முதல் பணிக்கு வரவில்லை. தற்போது அவர் ஊராட்சி செயலாளர் பணி வேண்டி விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தில் ஆணாக இருந்து திருநங்கையாக மாறும் உணர்வுகளால் ஏற்பட்ட மன தடுமாற்றத்தால் தான் பணிக்கு வர இயலவில்லை. தனக்கு மீண்டும் ஊராட்சி செயலாளர் பணியை வழங்கும்படி கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் அவரது மனநிலை, பாலின மாறுபாடு காரணமாக உடல் ரீதியான மாற்றம் மற்றும் அது தொடர்பான இடர்பாடுகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் பூந்தமல்லி ஒன்றியம், கொசவன் பாளையம் ஊராட்சியில் பணியமர்த்தப்பட்டார்.
சந்தன் ராஜ் தற்போது திருநங்கை தாட்சாயினி என எல்லாபுரம் ஒன்றியம் கோடுவெளி ஊராட்சியில், ஊராட்சி செயலாளராக வட்டார மாறுதலில் மீண்டும் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட ஆணாக இருந்து திருநங்கையாக மாறிய தாட்சாயினிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஊராட்சி செயலாளர் பணி ஆணையை வழங்கினார். அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சாவித்திரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தி, எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி, கோடுவெளி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story