பாலை தரையில் ஊற்றி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பாலை தரையில் ஊற்றி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்பாலை தரையில் ஊற்றி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோவை
கோவை மாவட்ட கலெக்டர் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். இதில் திரளான பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது பிரச்சினைகளை மனுக்களாக கொடுத்தனர். இதை கலெக்டர் சமீரன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் வந்த விவசாயிகள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று கூறி பால் மற்றும் மோரை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கால்நடை தீவனங்கள் மற்றும் இடு பொருட்கள் விலை அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயகள் கடும் பாதிப்பு அடைந்து உள்ளனர். இதற்கிடையே ஆவின் பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கம் மூலம் மாட்டு தீவனம் மானிய விலையில் வழங்கப்பட்டது. தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதையும் நிறுத்தி விட்டனர். இதனால் மாட்டு தீவனம் உள்ளிட்ட இடுபொருட்களுக்கு ரூ.300 முதல் ரூ.500 செலவு உயர்ந்து உள்ளது.
இதேபோல் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள், பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டரை ரூ.28 முதல் 29 வரை வாங்கி, ரூ.50-க்கு விற்பனை செய்கின்றனர். ஆனால், விவசாயிகளுக்கு விலையை உயர்த்தி தருவதில்லை.
எனவே தற்போது கொடுத்து வரும் கொள்முதல் விலையை காட்டிலும் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தர வேண்டும். மேலும், ஆவின் நிர்வாகம் கால்நடைகளுக்கு வரக்கூடிய நோய்களை தடுக்க, கொள்முதல் மையங்கள் மூலம் மருத்துவ முகாம் நடத்துவது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். விவசாயிகளின் குறைகளை தீர்க்க பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிர்வாகம் மூலம் மாதம் ஒருமுறை குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story






