அங்கலகுறிச்சியில் மின்தடையால் ஆத்திரம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி


அங்கலகுறிச்சியில் மின்தடையால் ஆத்திரம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 28 March 2022 11:05 PM IST (Updated: 28 March 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

அங்கலகுறிச்சியில் திடீர் மின் தடையால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

பொள்ளாச்சி

அங்கலகுறிச்சியில் திடீர் மின் தடையால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். 

மறியலில் ஈடுபட முயற்சி 

பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சி புதுக்காலனி, முருகன்கோவில் வீதி, உதயம் கார்டன் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு திடீரென்று மின் தடை ஏற்பட்டது. 

மாலை 5 மணி வரை காத்திருந்தும் எந்த பயனும் இல்லை. மேலும் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும், பழுதை சரிசெய்யவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கைகாட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். 

போலீசார் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீசார் விரைந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பின்னர் 6 மணிக்கு மின்சார பழுது சரிசெய்யப்பட்டு மின்வினியோகம் சீரானது. இதையடுத்து 15 நிமிடங்களில் மீண்டும் மின் தடை ஏற்பட்டது.

இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளதால் மின்சார பழுதை சரிசெய்ய ஊழியர்கள் யாரும் வரவில்லை என்று தெரிகிறது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

நடவடிக்கை இல்லை

அதிகாலை 3 மணிக்கு மின் தடை ஏற்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் போராட்டம் நடத்திய பிறகு 15 நிமிடங்கள் மட்டும் மின்சாரம் இருந்தது. குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவும் சிரமத்தில் உள்ளோம்.

 அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
தற்போது இரவு 8 மணி ஆகியும் மின்சாரம் வரவில்லை. செல்போன் சார்ஜ் போடமுடியவில்லை. சமையல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

1 More update

Next Story