பொள்ளாச்சியில் ஸ்கேட்டிங் மைதானத்தில் கூடுதல் வசதிகள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் வகையில் ஸ்கேட்டிங் மைதானத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்
பொள்ளாச்சி
தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் வகையில் ஸ்கேட்டிங் மைதானத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஸ்கேட்டிங் மைதானம்
பொள்ளாச்சியில் சர்வதேச தரத்தில் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்க வேண்டும் என்று கோவை மாவட்ட சறுக்கு விளையாட்டு சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.
இதை தொடர்ந்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சமத்தூர் ராம ஐய்யங்கார் நகராட்சி பள்ளி மைதானத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கும் பணி தொடங்கியது.
எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் நகராட்சி நிதி மூலம் ரூ.80 லட்சத்தில் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மைதானத்தில் தற்போது மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொள்ள மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
கூடுதல் வசதிகள்
இங்கு வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் 25 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். கோவையில் இருப்பதை விட பொள்ளாச்சியில் உள்ள மைதானம் சிறப்பாக சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் கூடுதலாக வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட சறுக்கு விளையாட்டு சங்க செயலாளர் சந்திரசேகர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
சர்வதேச தரம்
தமிழகத்தில் சென்னை, கோவை, பொள்ளாச்சியில் தான் அரசு அங்கீகாரம் பெற்ற சின்தட்டிக் ஸ்கேட்டிங் மைதானம் உள்ளது. சென்னைக்கு அடுத்து கோவையை விட பொள்ளாச்சியில் சர்வதேச தரத்தில் மைதானம் உருவாக்கப்பட்டு உள்ளது. 200 மீட்டர் ரிங்க் சுற்றிலும் சுவர் கட்டப்பட்டு, தார் சாலை அமைக்கப்பட்டு சிந்தட்டிக் போடப்பட்டு உள்ளது.
இந்த மைதானத்தில் பயிற்சி பெற்று மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள முடியும். மைதானத்தில் மின் விளக்கு குடிநீர் வசதி, கேலரி வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டிய உள்ளது. மேலும் வாகனங்கள் அதிகமாக வருவதால் தார் சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.
உடற்பயிற்சி கூடம்
இதனால் மைதானத்திற்கு உள்ளே சாலை வசதி, உடற்பயிற்சி கூடம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதுபோன்ற அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தினால் பொள்ளாச்சியில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளை நடத்த முடியும்.
இதுகுறித்து நகராட்சி தலைவர், ஆணையாளரிடம் வலியுறுத்தி உள்ளோம். அவர்களும் செய்து கொடுப்பதாக கூறி உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story






