வால்பாறையில் பெய்து வரும் கோடைமழையால் தேயிலை செடிகள் துளிர்விட தொடங்கியது

வால்பாறையில் பெய்து வரும் கோடைமழையால் தேயிலை செடிகள் துளிர்விட தொடங்கி உள்ளது. காபி செடிகளும் பூத்துக்குலுங்குகிறது.
வால்பாறை
வால்பாறையில் பெய்து வரும் கோடைமழையால் தேயிலை செடிகள் துளிர்விட தொடங்கி உள்ளது. காபி செடிகளும் பூத்துக்குலுங்குகிறது.
தேயிலை செடிகள்
வால்பாறையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-வது வாரம் பருவமழை நின்று போய்விட்டது. தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் இருந்து வால்பாறை சுற்று வட்டார பகுதி முழுவதும் வெயில் வாட்டி வந்தது. இதனால் வால்பாறை பகுதியில் கடுமையான வறட்சி நிலவியது.
இதனால் ஆங்காங்கே தனியார் காடுகளில் காட்டுத்தீ பிடித்தது. தேயிலை செடிகள் கருகின. இதனால் தேயிலை செடிகளுக்கு தோட்ட நிர்வாகங்கள் தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளிக்கும் பணியை மேற்கொண்டனர்.
கோடைமழை
இந்த வறட்சி காரணமாக தேயிலை செடிகளை தாக்கும் சிவப்பு சிலந்தி பூச்சி, இலைப்பேன் போன்ற பூச்சிகளும் தாக்கத் தொடங்கியது. இதனால் பச்சை தேயிலை உற்பத்தி பாதிக்கப் பட்டது.
விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தாலும், மழைபெய்தால் மட்டுமே பூச்சிகளின் தாக்குதலில் இருந்து செடிகளை பாதுகாக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதியில் இருந்து வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கோடைமழை பெய்ய தொடங்கியது. ஒருசில எஸ்டேட் பகுதியில் கனமழையாகவும், பல்வேறு எஸ்டேட் பகுதியில் மிதமான மழையாகவும் பெய்து வருகிறது.
துளிர்விட தொடங்கியது
இதன் காரணமாக தேயிலை செடிகளை தாக்கும் இலைப்பேன் தாக்குதல் குறைந்து தேயிலை செடிகள் துளிர் விட்டு வளர தொடங்கி உள்ளது. மேலும் கோடைமழை காரணமாக வால்பாறையில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள அரபிக்கா, ரோபஸ்ட்டா என்ற 2 வகையான காபி செடிகளும் பூக்கத் தொடங்கி விட்டது.
எப்போதுமே பிப்ரவரி மாத இறுதியில் கிடைக்க வேண்டிய மழையை நம்பித்தான் காபி செடிகளில் பூ பூக்கும். ஆனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக மார்ச் மாதத்தில் கோடைமழை கிடைத்தது.
இருந்தபோதிலும் மழை பெய்ததால் அனைத்து காபி செடிகளிலும் பூ பூத்து குலுங்குகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பாதுகாக்க முடியும்
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, தற்போது கோடை மழை பெய்து வருவதால், தேயிலை மற்றும் காபி செடிகள் நன்றாக உள்ளது. ஏப்ரல், மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
அந்த நேரத்தில் கோடை மழை பெய்தால் மட்டுமே இந்த செடிகளை பாதுகாக்க முடியும் என்றனர்.
Related Tags :
Next Story






