தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை- காஞ்சீபுர கலெக்டர் எச்சரிக்கை

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிளாஸ்டிக் பொருட்கள்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பை, தமிழக அரசு, 25.6.2018 நாளிட்ட அரசாணை எண் 84-ல் வெளியிட்டது. இதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவு பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள், பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், வினியோகிப்பதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.
சென்னை ஐகோர்ட்டு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்) பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன.
இதனை முழுமையாக கண்காணிக்க 7.2.2022 நாளிட்ட அரசாணை எண்.25 ன் படி மாவட்ட அளவிலான பணிக்குழு காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டம் 16.3.2022 அன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள், வணிக வளாகங்கள், துணி கடைகள், மருந்து கடைகள், பல்பொருள் அங்காடிகளில் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து, அதற்கு மாற்று பொருட்களை பயன்படுத்த ஒருவார காலத்திற்குள் மாறும்படி மார்ச் 21-ந் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
அபராதம்
மேலும் இதை தீவிரமாக கண்காணிக்க மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள் பகுதி வாரியாக திடீர் ஆய்வுகள் மேற்கொள்வார்கள். அவ்வாறு தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், போக்குவரத்து செய்தல், வினியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் உபயோகப்படுத்துதல் போன்றவை இந்த குழுவால் கண்டறியப்பட்டால் முதல் தடவை, 2-வது தடவை, 3-வது தடவை முறையே ரூ.100, ரூ.200, ரூ.300 அபராதம் விதிக்கப்படும்.
மளிகை கடைகள் மற்றும் மருந்து கடைகள் போன்ற நடுத்தர வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தல், ரூ.1000, ரூ.2 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வணிக வளாகங்கள், துணிக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் போன்ற மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தல் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் ரூ.25 ஆயிரம், பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், வழங்குதல், கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் ரூ.25,000, ரூ.50,000, ரூ.1,00,000 அபராதம் விதிக்கப்படும்.
எனவே, பொதுமக்கள், சிறிய வணிக விற்பனையாளர்கள், மளிகை கடைகள், மருந்து கடைகள், நடுத்தர மற்றும் பெரிய வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடி போன்ற இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்து பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






