சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு நஷ்டஈடு வழங்காததால் கோர்ட்டு ஊழியர்கள் அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தேசுமுகிப்பேட்டை பெரியத்தெருவைச் சேர்ந்தவர் கோபு வயது (44). இவர் திருப்போரூர் ஒன்றியம் ஆலத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். பின்னர், தங்களது பிள்ளைகளின் கல்விக்காக செங்கல்பட்டு, மேட்டுத்தெருவில் வாடகை வீட்டில் தங்கி அங்கிருந்து தினமும் திருப்போரூக்கு அரசு பஸ் மூலம் வேலைக்கு சென்று வந்தார். கடந்த 17-09-2010 அன்று வழக்கம்போல வேலை முடிந்து திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டுக்கு அரசு பஸ்சில் சென்றார். இவர் பயணம் செய்த பஸ் திருவடிசூலம் அருகே வந்தபோது செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் நோக்கி வந்த மற்றொரு அரசு பஸ்சும் கோபு பயணம் செய்த பஸ்சும் மோதியதில் கோபுவுக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து தனது இடது கை செயல் இழந்து போனதால் நஷ்டஈடு கேட்டு அரசு போக்குவரத்து கழகம் மீது செங்கல்பட்டு தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கீதாராணி 29-3-2019 அன்று 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ.28 லட்சத்து 73 ஆயிரத்து 833 வழங்க அரசு போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டார். அந்த பணம் இதுவரை வழங்கப்படாததால் மீண்டும் அதே கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
அதன் பேரில் நேற்று கோர்ட்டு ஊழியர்கள் செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள பஸ் டெப்போவுக்கு சென்றனர். அங்கு செங்கல்பட்டில் இருந்து காஞ்சீபுரம் செல்ல தயாரக இருந்த அரசு பஸ்சை வழிமறித்து ஜப்தி செய்வதற்கான நோட்டீசை பஸ்சின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டி பஸ்சை ஜப்தி செய்தனர். பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக ஜப்தி செய்த பஸ்சை டெப்போவின் ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு சென்றனர். இதில் மனுதாரரின் சார்பில் வக்கீல் ஜி.ஜி.ரமேஷ் ஆஜரானார்.
Related Tags :
Next Story






