ஆனைமலையில் ரூ 5 லட்சம் கேட்டு விவசாயியை கடத்திய 4 பேர் கைது
ஆனைமலையில் ரூ.5 லட்சம் கேட்டு விவசாயியை காரில் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
ஆனைமலையில் ரூ.5 லட்சம் கேட்டு விவசாயியை காரில் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயி
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம் (வயது 43). விவசாயி. இவரது தோட்டத்தில் கிழவன்புதூரை சேர்ந்த ராசுக்குட்டி (24) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
ராசுக்குட்டியின் நண்பர்களான தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த அஜய்பிரகாஷ் (20), திண்டுக்கல் மாவட்டம் தும்மாலப்பட்டியை சேர்ந்த கவின் (20), சூர்யா (23) ஆகியோர் சேர்ந்து ஹக்கீமை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டனர்.
இதற்காக ராசுக்குட்டி, ஹக்கீமை தொடர்பு கொண்டு தோட்டத்தில் தேங்காய் திருடி செல்லும் நபர்கள் யார் என்று தெரிந்து விட்டது. இதுதொடர்பான வீடியோ தன்னிடம் உள்ளது என்று கூறினார்.
அதற்கு ஹக்கீம் தனது வாட்ஸ்-அப் எண்ணிற்கு வீடியோவை அனுப்புமாறு கூறி உள்ளார். ஆனால் ராசுக்குட்டி தனது செல்போனில் இருந்து வீடியோவை அனுப்பினால் போகவில்லை. எனவே நேரில் வந்தால் வீடியோவை காட்டுவதாக கூறியதாக தெரிகிறது.
ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்
இதை நம்பி ஹக்கீம் ஆனைமலை காந்தி ஆசிரமம் பகுதிக்கு ராசுக்குட்டியை பார்க்க சென்றார். அங்கு அவர் சென்றதும் ஏற்கனவே தயாராக இருந்த ராசுக்குட்டி மற்றும் அவரது கூட்டாளிகள், ஹக்கீமை கத்தி முனையில் மிரட்டி காரில் கடத்தினார்கள்.
பின்னர் அவரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதுடன், ஆன்லைன் மூலம் ரூ.19 ஆயிரத்தை பறித்துக்கொண்டனர். பின்னர் அவரை போலீசில் சொன்னால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியதுடன், பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக கரூருக்கு அழைத்துச்சென்று மீண்டும் பொள்ளாச்சிக்கு வந்து மரப்பேட்டை பகுதியில் இறங்கிவிட்டு சென்றனர்.
4 பேர் கைது
இது குறித்த புகாரின்பேரில் துணை சூப்பிரண்டு சீனிவாசன் மேற்பார்வையில் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் காளிதாஸ், கவுதமன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை போலீசார் கடத்தல் கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.
அத்துடன் அம்பராம்பாளையம் சுங்கம் பஸ் நிறுத்தத்தில் நின்ற ராசுக்குட்டி, அஜய்பிரகாஷ், கவின், சூர்யா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஹக்கீமை கடத்தி ரூ.5 லட்சம் பறிக்க திட்டமிட்ட கும்பல், அவரிடம் இருந்து பணத்தை பறிக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்து பொள்ளாச்சியில் இறக்கிவிட்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story