பொள்ளாச்சி பாலக்காடு வழித்தடத்தில் பயணிகள் ரெயில் நலச்சங்கத்தினர் வலியுறுத்தல்
பொள்ளாச்சி-பாலக்காடு வழித்தடத்தில் பயணிகள் ரெயில் இயக்க பயணிகள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி-பாலக்காடு வழித்தடத்தில் பயணிகள் ரெயில் இயக்க பயணிகள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
மாதாந்திர பயணசீட்டு
ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கப்பட்ட ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்திற்கு 90 வயதாகிறது.
இந்த நிலையில் ஆனைமலை ரெயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் சுப்பேகவுண்டன்புதூர் ஊராட்சி நிர்வாகத்தினர் இணைந்து ரெயில் நிலைய நுழைவு வாயிலில் 91-வது ஆண்டு தொடக்க விழா நடத்தினர்.
விழாவில் ரெயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் மாணவர்கள், பெண்களுக்கு இலவசமாக மாதாந்திர பயண சீட்டு வழங்கப்பட்டது. மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் மாதாந்திர பயணசீட்டு வாங்கி சென்றனர்.
இதையடுத்து ரெயில் நிலையம் செல்லும் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. இதில் பாலக்காடு கோட்ட ரெயில்வே அதிகாரிகள், ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர், ஊராட்சி நிர்வாகத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து ஆனைமலை ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:-
பயணிகள் ரெயில்
ஆனைமலை ரோடு ரெயில் நிலையம் ஊரின் மைய பகுதியில் அமைந்து உள்ளது. எனவே பொதுமக்கள் எளிதில் சென்று வரும் வகையில் சுரங்கபாதை அமைக்க வேண்டும்.
அமிர்தா எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரெயில்களும் அரை மணி நேர இடைவெளியில் இயங்குவதை மாற்றி அமைக்க வேண்டும். திருச்செந்தூர் ரெயில் பாலக்காட்டில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டால் பொள்ளாச்சி, கோவைக்கு வேலைக்கு செல்வோருக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
பொள்ளாச்சி-பாலக்காடு ரெயில் பாதையில் தற்போது 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டும் இயக்குவதால் பயணிகள் அதிக கட்டணம் கொடுக்க வேண்டிய உள்ளது.
எனவே பொள்ளாச்சி, பழனி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வகையில் பயணிகள் ரெயில் இயக்க வேண்டும்.
பழனி வரை நீட்டிப்பு
மேலும் மின் மயமாக்கும் பணிகள் முடிந்ததால் எர்ணாகுளத்தில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும் மெமு ரெயிலை பழனி வரை நீட்டிக்க வேண்டும்.
இளநீர், தேங்காய், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் உள்ளிட்டவைகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு வசதியாக சரக்கு முனையம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றி ரெயில்வே உயர் அதிகாரிகள், மத்திய மந்திரிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story