தெலுங்கானாவில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு சிற்பங்கள் வடிவமைத்த மாமல்லபுரம் சிற்பகலைஞர்கள்


தெலுங்கானாவில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு சிற்பங்கள் வடிவமைத்த மாமல்லபுரம் சிற்பகலைஞர்கள்
x
தினத்தந்தி 3 April 2022 6:29 PM IST (Updated: 3 April 2022 6:29 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு சிற்பங்கள் வடிவமைத்த மாமல்லபுரம் சிற்பகலைஞர்கள் ஆகியோரை தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தெலுங்கானா மாநில அறநிலையத்துறை சார்பில் பரிவட்டம் கட்டி பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் இந்திய அளவில் கற்சிற்பங்கள் வடிவமைக்கும் முக்கிய நகரமாக திகழ்கிறது. இங்குள்ள சிற்ப கலைஞர்கள் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் ஆகம முறைப்படி பெரிய அளவில் கோவில்கள் கட்டுதல், சிலைகள் வடிவமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் நகருக்கு அருகில் உள்ள யாதகிரிகுட்டா மலைப்பகுதியில் தெலுங்கானா மாநில அறநிலையத்துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற லட்சுமிநரசிம்ம பெருமாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

ஆந்திர மாநிலத்திற்கு ஆன்மிக சிறப்பிடமாக திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் விளங்குவதை போன்று, தெலுங்கானா மாநில ஆன்மிக சிறப்பிடமாக லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் விளங்கும் வகையில் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் இந்த கோவிலை வைணவ ஆகம முறைப்படி புதுப்பித்து உள்ளார். முழுவதும் கருங்கல்லால் புதுப்பிக்கப்பட்ட இந்த கோவிலுக்கு பல்வேறு விருதுகள் பெற்ற மாமல்லபுரம் கற்சிற்ப கலைஞர் யானை வரதன், கோவில் மூலவர் சன்னதியில் சங்கு, சக்கரம், நந்தி சிலை, கருடாழ்வார் சிலை, பிரம்மாண்டமான யானை சிற்பம், சிம்மம் சிற்பம், முகப்பு வாயிலின் படிகட்டுகள் முதலியவற்றை முழுக்க, முழுக்க கருங்கல்லில் வடிவமைத்துள்ளார்.

அதேபோல் கோவில் முகப்பு வாயில் மரக்கதவை மாமல்லபுரம் மர சிற்ப கலைஞர் ரமேஷ் ஸ்தபதியும், வெண்கல சிலைகளை உலோக சிற்ப கலைஞர் ரவீந்திரன் ஸ்தபதியும் வடிவமைத்துள்ளார். கோவில் முழுமை பெற சிற்பங்கள் வடிவமைத்த மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த சிற்பகலைஞர்கள் யானை வரதன், ரவீந்திரன் ஸ்தபதி, ரமேஷ் ஸ்தபதி ஆகியோரை தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தெலுங்கானா மாநில அறநிலையத்துறை சார்பில் பரிவட்டம் கட்டி பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். அவர்களுக்கு நன்றியும் தெரிவித்து கொண்டார்.


Next Story