ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்


ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 4 April 2022 11:04 PM IST (Updated: 4 April 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டது.

பொள்ளாச்சி

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டது.

சுகாதார பணிகள் பாதிப்பு

பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் குப்பைகளை அகற்றுதல், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் தூய்மை பணியாளர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. இதற்காக ஒப்பந்த அடிப்படையில் 267 பேர் பணியாற்றி வருகின்றனர். இதை தவிர கள பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

பின்னர் சப்-கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்பிறகு சப்-கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு, அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-

ஊதிய உயர்வு

பொள்ளாச்சி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு இதுவரை சம்பள ரூ.450-க்கு பதிலாக பி.எப்., இ.எஸ்.ஐ. பிடித்தம் போக ரூ.370, கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ.350-க்கு பதிலாக ரூ.290 வழங்கி வருகின்றனர். 

கோர்ட்டு உத்தரவு மற்றும் குறைந்தபட்ச கூலி நிர்ணய சட்டப்படி தினக்கூலி ஒரு நாளைக்கு ரூ.650 கொடுக்க வேண்டும். ஆனால் அந்த கூலியை கொடுப்பதில்லை. 

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். தூய்மை பணிகள் மேற்கொள்ள சீருடை, போதுமான உபகரணங்கள் இல்லை. 

வருகை பதிவேட்டில் முறையாக கையெழுத்து வாங்குவதில்லை. 
இதுகுறித்து கேட்டால் சரியான பதில் கூறாமல் வேலை நிறுத்தம் செய்கின்றனர். கொரோனா முன் கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story