பாலாறு வடிநில கோட்ட பாசன சங்க தேர்தல் தலைவர் பதவிக்கு 14 பேர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு
பாலாறு வடிநில கோட்ட பாசன சங்கங்களுக்கு தேர்தலில் 14 பேர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது. 7 இடங்களுக்கு வருகிற 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பொள்ளாச்சி
பாலாறு வடிநில கோட்ட பாசன சங்கங்களுக்கு தேர்தலில் 14 பேர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது. 7 இடங்களுக்கு வருகிற 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பாசன சங்க தேர்தல்
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் பாலாறு வடிநில கோட்டத்தில் உள்ள நல்லூர், தொண்டாமுத்தூர், கஞ்சம்பட்டி, நல்லாம்பள்ளி, ஆவலப்பம்பட்டி உள்பட 21 கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தலைவர் மற்றும் 142 ஆட்சி மன்ற தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் தலைவர் பதவிக்கு 32 பேரும், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிக்கு 133 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறியதாவது:-
போட்டியின்றி தேர்வு
பாலாறு வடிநில கோட்ட பாசன சங்க தலைவர், ஆட்சி மன்ற தொகுதி உறுப்பினர் சோத்து மொத்தம் 145 பதவிகளுக்கு, 165 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நல்லூர், நல்லாம்பள்ளி, வரதனூர், சோழனூர், குள்ளிசெட்டிபாளையம், சோலபாளையம், கள்ளிப்பாளையம், ஆர்.பொன்னாபுரம், கப்பளாங்கரை, தேவணாம்பாளையம், காணியாலாம்பாளையம், ஆண்டிபாளையம், வடசித்தூர், செட்டியக்காபாளையம் ஆகிய பாசன சங்கங்களுக்கான தலைவர் பதவிக்கு தலா ஒருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளதால் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது.
இதேபோன்று 16 ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது. தற்போது தலைவர் பதவிக்கு மீதமுள்ள 7 பாசன சங்கங்களுக்கும், ஆட்சி மன்ற தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தலில் 5 பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
17-ந் ேததி தேர்தல்
அத்துடன் வருகிற 8-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. அன்றைய தினம் பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். இதை தொடர்ந்து மாலை 5.30 மணி முதல் இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
வருகிற 17-ந்தேதி பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரை வாக்குபதிவு நடைபெறும். அன்றைய தினம் மாலை 4 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story