வேகமாக குறைந்து வரும் ஆழியாறு அணை நீர்மட்டம் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதில்
ஆழியாறு அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தாலும் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? என்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.
பொள்ளாச்சி
ஆழியாறு அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தாலும் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? என்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.
ஆழியாறு அணை
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆழியாறு ஆறு மூலமாகவும், புதிய ஆயக்கப்பட்டு பாசனத்துக்கு வேட்டைக்காரன்புதூர் கால்வாய் வழியாகவும் தண்ணீர் வழங்கப்படுகிறது.
மேலும் கோவை குறிச்சி, குனியமுத்தூர் மற்றும் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமப்புறங்களுக்கு குடிநீர் ஆதாரமாக ஆழியாறு அணை உள்ளது.
குறையும் நீர்மட்டம்
இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் காரணமாக அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஆனால் போதிய மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் வேகமாக குறைந்து வருகிறது. காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 71.90 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 357 கன அடி நீர்வரத்தும், அணையில் இருந்து வினாடிக்கு 180 கன அடிநீர் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் திறந்து விடப்பட்டு உள்ளது. அணையின் நீர்மட்டம் குறைந்ததால் பாறைகள் வெளியே தெரிகிறது.
விவசாயிகள் கவலை
இதற்கிடையில் அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் ஒரு சில கிராமங்களில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆழியாறு அணையில் 3 ஆயிரத்து 864 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கலாம். தற்போது 1029 மில்லியன் கன அடிநீர் இருப்பு உள்ளது. இதே கடந்த ஆண்டு 2072 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது.
கடந்த ஆண்டை விட 1000 மில்லியன் கன அடி நீர்இருப்பு குறைவாக உள்ளது. இதற்கிடையில் பரம்பிக்குளம், அப்பர் ஆழியாறு அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது.
இதனால் தேவைப்பட்டால் அங்கிருந்து தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். எனவே ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story