ஜமீன்ஊத்துக்குளி காந்தி நகரில் ரேஷன்கடை அமைக்க வேண்டும் சப்-கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
ஜமீன்ஊத்துக்களி காந்தி நகரில் ரேஷன் கடை அமைக்க கோரி கிராம மக்கள் சப்-கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி
ஜமீன்ஊத்துக்களி காந்தி நகரில் ரேஷன் கடை அமைக்க கோரி கிராம மக்கள் சப்-கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.
இதில் பொதுமக்கள் பலர் கலந்து ெகாண்டு தங்கள் கோரிக்கையை மனுக்களாக எழுதி கொடுத்தனர். ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் கிராமமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்கு 600-க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர்.
இவர்கள் வடுகபாளையம் பகுதிகளில் உள்ள 2 ரேஷன் கடைகளுக்கும், கே.பி.எஸ். அருகில் உள்ள ஒரு கடைக்கும், ஜமீன்ஊத்துக்குளியில் உள்ள ஒரு கடைக்கும் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்கவும், முறையாக பொருட்கள் கிடைப்பதற்கு காந்தி நகர் பகுதியில் ரேஷன் கடை அமைத்து கொடுக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டி கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தெருவோர வியாபாரிகள்
ஆனைமலை ஒன்றிய கோவை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆழியாறு அணை பூங்கா முன்புறம் உள்ள சாலையில் போக்குவரத்திற்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறு இல்லாமல் தெருவோர வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் கோட்டூர் பேரூராட்சி மூலம் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஆழியாறு அணை பூங்கா முன்புறம் தெருவோர வியாபாரம் செய்ய கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுக்கின்றனர். மேலும் வியாபாரிகளின் தள்ளுவண்டிகள் மற்றும் வியாபாரத்திற்கு வைத்திருந்த பொருட்களை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சேதப்படுத்தி எடுத்து சென்றனர்.
இதுகுறித்து ஆழியாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story