கோவை தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி
லண்டனில் இருந்து மூலிகை எண்ணெய் அனுப்புவதாக கூறி கோவை தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்யப்பட்டது. வாட்ஸ் அப் மூலம் பேசி ஏமாற்றிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை
லண்டனில் இருந்து மூலிகை எண்ணெய் அனுப்புவதாக கூறி கோவை தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்யப்பட்டது. வாட்ஸ் அப் மூலம் பேசி ஏமாற்றிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தொழிலதிபர்
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம்பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் சங்கர் (வயது 46). தொழில் அதிபர். கடந்த மாதம் இவரது உறவினரின் முகநூலுக்கு ஒரு பெண்ணிடம் இருந்து நட்பு அழைப்பு வந்தது.
மேலும் முகநூல் மூலம் அந்த பெண் தனது பெயர் குளேரியா என்றும், தான் லண்டனில் உள்ள ஒரு மருந்து கம்பெனியில் பணி புரிவதாக தெரிவித்தார். மேலும் இந்தியாவில் மூலிகை எண்ணெய் விற்பனை செய்ய டீலர்கள் தேவைப்படுவதாக தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து அந்த நபர், தனது உறவினரான தொழில் அதிபர் தினேஷ் சங்கரிடம் இதுகுறித்து தெரிவித்தார். இந்த மூலிகை எண்ணெய் வியாபாரத்தில் ஆர்வம் கொண்ட தினேஷ் சங்கர் அந்த பெண்ணிடம் வாட்ஸ் அப் அழைப்பு மூலம் பேசி உள்ளார்.
மூலிகை எண்ணெய்
அப்போது அந்த பெண் நீங்கள் ரூ.25 லட்சம் கொடுத்தால் லண்டனில் இருந்து மூலிகை எண்ணெய் அனுப்பி வைப்பதாக தெரிவித்து உள்ளார். மேலும் இந்த மூலிகை எண்ணெயை ரூ.70 லட்சம் வரை விற்பனை செய்ய முடியும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய தினேஷ் சங்கர் பணம் செலுத்த சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த பெண், இந்தியாவில் உள்ள சர்மா டிரேடிங் நிறுவனத்தில் இருந்து உங்களை தொடர்பு கொள்வார்கள் என்று கூறிவிட்டு, அழைப்பை துண்டித்துவிட்டார்.
ரூ.25 லட்சம் மோசடி
இதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் வட மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தினேஷ் சங்கரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மூலிகை எண்ணெய் வேண்டும் என்றால் முன்பணம் முதலில் அனுப்ப வேண்டும் என்று கூறினார். பின்னர் தினேஷ் சங்கர் அவர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ஆன்லைன் மூலம் 5 தவணைகளாக ரூ.25 லட்சத்து 10 ஆயிரத்தை அனுப்பினார்.
பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் மூலிகை எண்ணெயை அனுப்பவில்லை. இதனால் தினேஷ் சங்கர் லண்டனில் இருந்து பேசிய பெண்ணையும், வடமாநில நபரையும் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் இருவரின் செல்போன் எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர், இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமாநில கும்பல் கைவரிசை?
இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், தினேஷ் சங்கர் ஆன்லைன் மூலம் 3 வங்கிகளின் கணக்கு எண்ணிற்கு 5 தவணையாக ரூ.25 லட்சத்து 10 ஆயிரம் அனுப்பி உள்ளார். இந்த வங்கிகள் எல்லாம் வட மாநிலங்களில் உள்ளன.
எனவே வட மாநிலங்களை சேர்ந்த மோசடி கும்பல் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. மேலும் வாட்ஸ் அப் மூலம் பேசிய அந்த பெண் லண்டனை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பு மிக குறைவுதான். மேலும் பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கில் இருந்து உடனடியாக பணம் எடுக்கப்பட்டு உள்ளது.
எனவே பொதுமக்கள் எந்தவொரு பொருளையும் வாங்க நேரில் சென்று பார்க்காமல் ஆன்லைன் மூலம் அந்த தொகை செலுத்த வேண்டாம் என்றனர்.
Related Tags :
Next Story