கோவையில் மீண்டும் சதம் அடித்த டீசல் விலை


கோவையில் மீண்டும் சதம் அடித்த டீசல் விலை
x
தினத்தந்தி 5 April 2022 11:27 PM IST (Updated: 5 April 2022 11:27 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் டீசல் விலை மீண்டும் சதம் அடித்து உள்ளது. மேலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110-ஐ தாண்டி விட்டது.

கோவை
கோவையில் டீசல் விலை மீண்டும் சதம் அடித்து உள்ளது. மேலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110-ஐ தாண்டி விட்டது.

பெட்ரோல்-டீசல் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பெட்ரோல்- டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் 92 ரூபாய்க்கும், டீசல் 85 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 21-ந் தேதி டீசல் லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து முதல்முறையாக வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அன்றைய தினம் பெட்ரோல் ஒரு லிட்டர் 104 ரூபாய் 8 காசுக்கு விற்பனை ஆனது.

கலால் வரி குறைப்பு

இதன்பின்னர் கடந்த நவம்பர் மாதம் 3-ந் தேதி கோவையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய் 12 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு லிட்டர் டீசல் 103 ரூபாய் 07 காசு வரை விற்பனையானது. இந்த அதிகப்படியான விலை ஏற்றத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்து உத்தரவிட்டது. இதன்படி பெட்ரோலுக்கு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. இதனால் தீபாவளியன்று பெட்ரோல் 101 ரூபாய் 85 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு லிட்டர் டீசல் 91 ரூபாய் 90 காசுக்கு விற்பனையானது. இந்த விலை குறைப்பு தீபாவளி பண்டிகை தினத்தன்று அமலுக்கு வந்ததால், கோவை உள்பட தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டீசல் விலை சதம் அடித்தது

ஆனால் இந்த மகிழ்ச்சி பொதுமக்களுக்கு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ஏனெனில் கடந்த மாதம் 22-ந் தேதியில் இருந்து பெட்ரோல் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன்படி கோவையில் கடந்த 22-ந் தேதி பெட்ரோல் 102 ரூபாய் 61 காசுக்கும், டீசல் 92 ரூபாய் 66 காசுக்கும் விற்பனையானது.

இது அவ்வப்போது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் பெட்ரோல் 109 ரூபாய் 79 காசும், டீசல் 99.50 காசும் விற்பனையாது. இந்தநிலையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசும், டீசல் 1 ரூபாய் 14 காசும் விலை உயர்ந்தது.

 இதனால் வரலாறு காணாத வகையில் கோவையில் புதிய உச்சமாக தற்போது பெட்ரோல் 110 ரூபாய் 54 காசுக்கு விற்பனையானது. இதேபோல் டீசல் விலை மீண்டும் சதம் அடித்து நேற்று 100 ரூபாய் 64 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

Next Story