திருப்பூர் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்
திருப்பூர் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சியில் ரூ.1,568½ கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ.10 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தினசரி மாநகரில் குடிநீர் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.10 கோடி பற்றாக்குறை பட்ஜெட்
திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 2022-23-ம் ஆண்டு பட்ஜெட்டை வரி சீராய்ப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் கோமதி, மேயரிடம் தாக்கல் செய்து பேசியதாவது:-
திருப்பூர் மாநகராட்சியின் வருவாய் நிதி வரவினமாக ரூ.624 கோடியே 64 லட்சத்து 74 ஆயிரம், குடிநீர் வடிகால் நிதி வரவினமாக ரூ.926 கோடியே 75 லட்சத்து 13 ஆயிரம், கல்வி நிதி வரவினமாக ரூ.7 கோடியே 14 லட்சத்து 74 ஆயிரமும் என மொத்தம் ரூ.1,558 கோடியே 54 லட்சத்து 62 ஆயிரம் வரவினமாக உள்ளது. இதில் வருவாய் நிதி செலவினமாக ரூ.626 கோடியே 89 லட்சத்து 5 ஆயிரம், குடிநீர் வடிகால் நிதி செலவினமாக ரூ.934 கோடியே 64 லட்சத்து 11 ஆயிரம், கல்வி நிதி செலவினமாக ரூ.7கோடியே 10 லட்சமும் என மொத்தம் ரூ.1,568 கோடியே 63 லட்சத்து 16 ஆயிரம் செலவினமாக உள்ளது.
அதன்படி வருவாய் நிதியில் பற்றாக்குறையாக ரூ.2 கோடியே 24 லட்சத்து 31 ஆயிரமும், குடிநீர் வடிகால் நிதி பற்றாக்குறையாக ரூ.7 கோடியே 88 லட்சத்து 98 ஆயிரமும், கல்வி நிதியில் ரூ.4 கோடியே 75 லட்சம் உபரியாகவும் உள்ளது. மொத்தம் மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.10 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரம் பற்றாக்குறை பட்ஜெட்டாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினசரி குடிநீர் வினியோகம்
பின்னர் மேயர் தினேஷ்குமார் பட்ஜெட் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதில் நாம் பொறுப்பேற்ற பிறகு மாநில அளவில் 2-வது இடத்தில் இருந்து திருப்பூர் மாநகராட்சி முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் இந்த திட்டத்தில் ரூ.5 கோடியே 62 லட்சம் மதிப்பில் 12 பணிகளுக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தில் குடிநீர் மேம்பாட்டு திட்டபணி ரூ.1,120 கோடியே 57 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு 74 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. இந்த திட்டத்தை நிறைவு செய்ய கால இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இந்த குடிநீர் திட்டத்தை செயலாக்கத்துக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநகரத்தில் ஆண்டு இறுதிக்குள் கூடுதல் குடிநீர் பெற சாத்தியக்கூறு உள்ளதால் குடிநீர் வினியோகிக்க கால இடைவெளி கணிசமான அளவில் குறைத்து படிப்படியாக குடிநீர் வினியோகம் மேம்படுத்தப்படும்.
இந்த திட்டம் முழுமை அடையும்போது மாநகரில் தினசரி குடிநீர் வினியோகம் நடைபெறும். மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் மாநகராட்சி பகுதிகளில் நீர் ஆதாரத்தை ஆய்வு செய்து புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 4-வது குடிநீர் திட்டத்தின் மூலம் மீதம் உள்ள மாநகராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதாள சாக்கடை திட்டப்பணி
அம்ரூத் திட்டத்தின் முதல்கட்ட பாதாள சாக்கடை திட்டபணியில் ரூ.636 கோடியே 40 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 72 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள பகுதிகளில் 2-ம் கட்ட உத்தேச திட்டப்பணியில் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.985 கோடியே 7 லட்சம் மதிப்பில் 28 பணிகளில் 10 பணிகள் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள அனைத்து பணிகளும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முடிந்த பணிகளில் இதுவரை ரூ.4 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டப்பட்டு ஈடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் முழுவதும் முடிந்தால் ரூ.10 கோடி வருவாய் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும்.
மாநகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையங்கள், மண்டல அலுவலங்கள் ஆகிய இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைபை வசதி செய்யப்படும். இதன் மூலமாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சேவைகள் மேம்படுத்தப்படும். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்கள் மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை வலைதளங்கள் மூலம் செலுத்த வசதியாக அமையும். மின்சிக்கன நடவடிக்கையாக உயர்மின் கோபுர மின்விளக்கு, சோடியம் ஆவி விளக்குகளை மொத்த சாலைகளின் நீளத்துக்கு ஏற்ப கூடுதல் மின் சிக்கன தெருவிளக்குகள் அமைக்கப்படும்.
பள்ளிக்கட்டிடங்கள்
மாநகராட்சியில் நீர்நிலைகளில் பாதுகாப்பற்ற நிலையில் வசித்த 103 பேருக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படும். பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் மாஸ்கோ நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறைகள், உயர்நிலைப்பள்ளியில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் படிக்கட்டுடன் கூடிய 8 வகுப்பறைகள், கழிப்பிடங்கள் புதிதாக கட்டுவதற்கு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இடுவாயில் மாநகராட்சி சொந்தமான 12.50 ஏக்கர் பரப்பளவில் அரசு மற்றும் தனியார் கூட்டு ஒப்பந்த முறையில் அறிவியல் பூங்கா வடிவமைக்கப்பட்டு வருகிறது. மாநகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் அடர் மூங்கில் பூங்காக்கள், மியாவாக்கி திட்டத்தின் மூலம் தனியார் பங்களிப்புடன் மரங்கள் நட்டு அடர்காடுகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story