என்ஜினீயர், வாலிபர் இழந்த ரூ 2¾ லட்சம் மீட்பு
என்ஜினீயர், வாலிபர் இழந்த ரூ.2¾ லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
வேலூர்
குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப், என்ஜினீயர். இவரது நண்பர் பெயரில் மர்மநபர் போலியான முகநூல் கணக்கு தொடங்கி உள்ளார். அந்த மர்மநபர் பிரதீப்புக்கு குறுந்தகவல் அனுப்பினார். அதில் எனது குழந்தைக்கு அவசர சிகிச்சைக்காக பணம் தேவைப்படுகிறது. உடனடியாக அனுப்பவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த குறுந்தகவலை தனது நண்பர் தான் அனுப்பி உள்ளார் என்று நம்பிய பிரதீப், மர்மநபர் தெரிவித்த வங்கிக்கணக்குக்கு 3 தவணைகளாக ரூ.90 ஆயிரத்தை செலுத்தி உள்ளார். இதையடுத்து தனது நண்பரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அபர்ணா மற்றும் போலீசார் மர்மநபரின் வங்கிக்கணக்கை முடக்கி பணத்தை திரும்ப மீட்டனர்.
இதேபோல வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த பத்ரிநாராயணன் (32) என்பவரிடம் பங்குச்சந்தை முதலீடு தொடர்பாக மர்மநபர்கள் ஆன்லைன் மூலம் ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்தை பெற்று மோசடி செய்தனர். இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து அந்த பணத்தை மீட்டனர். மீட்கப்பட்ட பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story