ராமேசுவரம் மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும்


ராமேசுவரம் மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும்
x
தினத்தந்தி 6 April 2022 11:08 PM IST (Updated: 6 April 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை சிறையில் தவிக்கும் மீனவர்களை மீட்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 ராமேசுவரம், 
இலங்கை சிறையில் போதிய உணவுகள் கிடைக்காமல் தவிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்டு கொண்டுவர வேண்டும் என அவர்களின் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 
சிறையில் மீனவர்கள் 
ராமேசுவரம் பகுதியில் இருந்து கடந்த 2-ம் தேதி 12 மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி விசைப்படகு மற்றும் 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இதேபோல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இலங்கை சிறையில் ராமேசுவரம், மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மட்டும் மொத்தம் 32 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அனைத்து அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைக்காமல் மிகுந்த கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் சரியான உணவு கிடைக்காமல் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இதனால் மீனவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் தவித்து வருகின்றனர். 
நடவடிக்கை 
மேலும், இலங்கை சிறையில் போதிய உணவு கிடைக்காமல் சிரமப்பட்டு தவித்து வரும் ராமேசுவரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 32 மீனவர்களையும் உடனடியாக மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story