புதிதாக வடிவமைக்கப்பட்ட தேர் வெள்ளோட்டம்


புதிதாக வடிவமைக்கப்பட்ட தேர் வெள்ளோட்டம்
x
தினத்தந்தி 7 April 2022 1:37 AM IST (Updated: 7 April 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

சுவாமிமலை சுவாமிநாதர் காவில் சித்திரை திருவிழாவுக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட தேர் வெள்ளோட்டம் நடந்தது.

கபிஸ்தலம்;
சுவாமிமலை சுவாமிநாதர் காவில் சித்திரை திருவிழாவுக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட தேர் வெள்ளோட்டம் நடந்தது. 
சுவாமிமலை சுவாமிநாதர் கோவில்
ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலில் வருடந்தோறும் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சித்திரை பெருவிழா சிறப்பாக நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு சித்திரை பெருவிழாவை வழக்கம்போல் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்து இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 
இந்த நிலையில் கோவிலில் உள்ள தேர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழுதடைந்து விட்டது. இதனால் புதிதாக தேரை வடிவமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி ரூ.32 லட்சம் செலவில் 23 டன் எடையில்  இலுப்பை மரத்தில் செய்யப்பட்ட புதிய தேர் இந்த ஆண்டு நடைபெற உள்ள சித்திரை பெருவிழாவில் வலம்வர உள்ளது. 
வெள்ளோட்டம்
காரைக்குடி ராதாகிருஷ்ணன் ஸ்தபதியார் குழுவினர் கடந்த ஓராண்டுக்கு மேல் சுவாமிமலையில் முகாமிட்டு இந்த தேரை வடிவமைத்தனர். புதிதாக வடிவமைக்கப்பட்ட தேர் மூலம் வருகிற 18-ந் தேதி(திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.  
இதன் முன்னேற்பாடாக புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த தேர் நேற்று காலை வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு சித்திரை தேர் தேர்மண்டப இடத்திலிருந்து பூஜை  செய்யப்பட்டு தேர் முக்கிய 4 வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் சித்திரை தேர் மண்டபத்தில் நிறுத்தப்பட்டது. 
சித்திரை தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி, துணை தலைவர் சங்கர், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, மற்றும் கோவில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி, துணை ஆணையர் ஜீவானந்தம், கோவில் பொறியாளர் சண்முகம், மற்றும் கோவில் பணியாளர்கள், பொதுமக்கள், கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Next Story