ரெயில் நிலையத்தில் பயணிகள் சேவை குழு தலைவர் ஆய்வு
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இந்திய ரெயில்வே பயணிகள் சேவை குழு தலைவர் ரமேஷ் சந்திரா ரத்னா ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இந்திய ரெயில்வே பயணிகள் சேவை குழு தலைவர் ரமேஷ் சந்திரா ரத்னா ஆய்வு செய்தார்.
சேவைக்குழு தலைவர்
இந்திய ரெயில்வே பயணிகள் சேவை குழு தலைவர் ரமேஷ் சந்திரா ரத்னா நேற்று குமாி மாவட்டம் வந்தார். பின்னர் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ஆய்வு நடத்தினார். நடைமேடை, கழிவறைகள், குடிநீர், பயணிகள் ஓய்வறை, பார்சல் சேவை உள்ளிட்ட அனைத்து இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக ரெயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ரெயில் நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அதாவது நாகர்கோவிலில் இருந்து தற்போது எத்தனை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது? நடைமேடைகளில் இருக்கை வசதிகள் எத்தனை உள்ளன? எத்தனை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன? இரட்டை ரெயில் பாதை பணிகள் எந்த நிலையில் உள்ளது? ஆகியவற்றை கேட்டறிந்தார்.
கோரிக்கை மனு
அப்போது அதிகாரிகள் கூறுகையில், “நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து தினசரி 60 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு தேவையான இருக்கைகள் உள்ளன. ரெயில் நிலையத்தில் 48 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன” என்றனர்.
இதைத் தொடர்ந்து இந்திய ரெயில்வே பயணிகள் சேவை குழு தலைவர் ரமேஷ் சந்திரா ரத்னாவிடம் குமரி மாவட்ட பா.ஜனதா பொருளாளர் முத்துராமன் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், "ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட்டை ஒருமுறை மூடினால் மீண்டும் திறக்க 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை ஆகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகிறார்கள். மாணவ- மாணவிகள் பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை. எனவே ரெயில்வே கேட் மூடப்படும் நேரத்தை குறைக்க வேண்டும். ஆரல்வாய்மொழியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவிலுக்கு கூடுதலாக ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story