காங்கிரஸ் எழுச்சி நடைபயணம்


காங்கிரஸ் எழுச்சி நடைபயணம்
x
தினத்தந்தி 7 April 2022 2:46 AM IST (Updated: 7 April 2022 2:46 AM IST)
t-max-icont-min-icon

சோனியாகாந்தி வெற்றி கூட்டணியை அமைப்பார் எனவும், 2024-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும் எனவும் கே.வி.தங்கபாலு கூறினார்.

தஞ்சாவூர்;
சோனியாகாந்தி வெற்றி கூட்டணியை அமைப்பார் எனவும், 2024-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும் எனவும் கே.வி.தங்கபாலு கூறினார்.
காங்கிரஸ் எழுச்சி நடைபயணம்
மகாத்மா காந்தி உப்பு சத்யாகிரக பாதயாத்திரை நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் எழுச்சி நடைபயணம் திருச்சி முதல் வேதாரண்யம் வரை நடைபெறுவது தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்திற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எழுச்சி நடைபயணம்
கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது
வருகிற 13-ந் தேதி திருச்சியில் தொடங்கும் காங்கிரஸ் எழுச்சி நடைபயணம் வேதாரண்யத்தில் 30-ந் தேதி நிறைவடைகிறது. மகாத்மா காந்தி, ராஜாஜி ஆகியோர் எப்படி பாதயாத்திரை சென்றார்களோ அவர்களுடன் நாம் பாதயாத்திரை செல்கிறோம் என்ற உணர்வுடன் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் நடந்த சாதனைகளையும், இந்திய அளவில் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் ஆட்சியில் நடந்த சாதனைகளையும் மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பொதுச் செயலாளர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, பெருமாள், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் மன்னை மதியழகன், மாநகர நிர்வாகிகள் கோவி.மோகன், பழனியப்பன், வயலூர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
2024-ல் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி
கூட்டத்திற்கு பின்னர் தங்கபாலு நிருபர்களிடம் கூறும்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமையும். 2004-ம் ஆண்டு தலைவர் சோனியா காந்தி எப்படி வெற்றி கூட்டணியை அமைத்தாரோ அதேபோல் 2024-ம் ஆண்டிலும் வெற்றி கூட்டணியை அமைப்பார். நல்லாட்சி அமையும். அதற்கு காங்கிரஸ் தலைமை ஏற்கும். தமிழகத்தில் சொத்து வரி உயர்வுக்கு மத்தியஅரசின் அழுத்தமே காரணம் என்றார்.

Next Story