சோளம் அறுவடை பணிகள் தீவிரம்
உடுமலை பகுதியில் சோளம் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் சோளம் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிறுதானிய சாகுபடி
தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் ராகி, கம்பு, சோளம், வரகு உள்ளிட்ட சிறுதானியங்களின் பயன்பாடு அதிக அளவில் இருந்தது. காலப்போக்கில் சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்து விட்டது. இதனால் மானாவாரியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்ட சிறுதானிய சாகுபடியும் வெகுவாகக் குறைந்தது.
இந்தநிலையில் தற்போது பொதுமக்களிடையே சிறுதானியங்களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால் சிறுதானியங்களின் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் உடுமலை பகுதியில் மானாவாரியில் வெள்ளை சோளம் பயிட்டுள்ள விவசாயிகள் தற்போது அறுவடைப் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
சர்க்கரை குறைவு
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
‘அரிசி, கோதுமையைப் போல சோளத்தையும் உணவில் பயன்படுத்துவது நல்லது. அதிலும் அரிசியை விட பல மடங்கு சத்துக்கள் சோளத்தில் உள்ளது. அதேநேரத்தில் இதில் சர்க்கரைச் சத்து குறைந்த அளவிலேயே உள்ளதால் சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடிய உணவு வகைகளில் ஒன்றாக உள்ளது. இதன் சாகுபடியைப் பொறுத்தவரை விவசாயிகள் பெரிய அளவில் முதலீடையோ உழைப்பையோ கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
பருவமழை பெய்து மண்ணில் ஈரப்பதம் இருக்கும் போது ஏரோட்டி, விதைத்து விட்டு வீட்டுக்கு வந்தால் அறுவடை செய்வதற்கு காட்டுக்கு சென்றால் போதும். அந்த அளவுக்கு பராமரிப்போ உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களோ தேவைப்படாத பயிராக சோளம் சாகுபடி உள்ளது. மேலும் எல்லாவிதமான பருவநிலைகளையும் தாங்கி வளரக்கூடியது. அறுவடை செய்து தானியங்களைப் பிரித்தெடுத்த பிறகு மிச்சமுள்ள கழிவுகள் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. மொத்தத்தில் குறைந்த உழைப்பில் அதிக பலன்களை அள்ளித் தருவது சோளம் சாகுபடி என்று சொல்ல முடியும். தற்போது அறுவடை செய்த தானியங்களை உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்'.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Related Tags :
Next Story