மகத்தான மருத்துவமனை என்ற நிலையை உருவாக்க வேண்டும்
சிகிச்சைபெற வரும் நோயாளிகளின் மனதில் அரசு மருத்துவமனைகள் மகத்தான மருத்துவமனைகள் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என மருத்துவ அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை மூலம் ‘நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” திட்டத்தை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்டார மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க மருத்துவத்துறையின் மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு 100 சதவீதம் சிறப்பாக செயல்படும் வகையில் புதிய திட்டமாக ‘நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற நிலையை உருவாக்கும் விதமாக இத்திட்டம் செயல்பட தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில், இத்திட்டமானது ஏப்ரல் மாதம் முழுவதும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகின்றன.
குடிநீர் இணைப்புகள்
அதன்படி ஒவ்வொரு மருத்துவமனையிலும் குடிநீர் இணைப்புகள் மற்றும் குழாய்கள் புதுப்பித்தல், கழிவறை கட்டிடங்களை புதுப்பித்தல் பணி மேற்கொள்வதுடன் தேவைக்கேற்ப கூடுதல் கழிப்பறை கட்டிடங்கள் அமைத்தல், உள்நோயாளிகள், வெளிநோயாளிகள், பார்வையாளர்கள் என அனைவருக்கும் தேவையான உணவுக்கூடங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதி ஆகியவற்றில் கை கழுவும் தொட்டிகள், சுற்றுச்சுவர் மற்றும் மருத்துவமனை வளாகத்தின் உட்புறத்தில் தரைத்தளங்களை சீரமைத்தல், மருத்துவமனையின் பரப்பளவிற்கு ஏற்ப போதிய அளவு மின்விளக்கு அமைத்தல் போன்ற பணிகளை ஒரு மாத காலத்திற்குள் முடித்திட வேண்டும். இப்பணிகளை பொதுப்பணித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், நகராட்சி நிர்வாகம், பேரூராட்சி துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு திட்டமிட்டபடி பணிகளை முடித்திட வேண்டும். இத்திட்டத்தின் நோக்கம் சிகிச்சை பெற வருவோரின் மனநிலைக்கு ஏற்ப சிகிச்சை வழங்குவதுடன், அவர்களின் அடிப்படை தேவையான சுற்றுச்சூழலை முழுமையாக மேம்படுத்துவதன் மூலம் அவர்களுக்கான மனநிறைவு கிடைக்கும். பொதுவாக நோயுடன் வரும் நபர் மிகுந்த மனபாதிப்புடன் இருப்பார், அதேவேலை அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவதுடன் அவர் இருக்கும் இடத்தின் சுற்றுச்சூழல் மனநிறைவாக இருக்கும்போது அவருக்குள் உண்டான உடல்நலக்குறைவு அவருக்கே தெரியாமல் மறைந்து விடுவதுபோன்ற உணர்வை எட்டும். அந்தளவிற்கு ஒவ்வொருவரின் மனநிலையினை மாற்ற வேண்டும் என்ற மருத்துவ வசதியுடன் கூடிய சுற்றுச்சூழலை வழங்குவதை மருத்துவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். சிகிச்சை பெற வரும் ஒவ்வொருவரின் மனதிலும் இது ‘நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு அனைத்துத்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் குந்தவிதேவி, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சண்முகக்கனி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story