அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்க கூடாது- ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 7 April 2022 11:50 PM IST (Updated: 7 April 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

ஊழலுக்கு மூளையாக இருந்த அனில்தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்க கூடாது என மும்பை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்து உள்ளது.

மும்பை, 
ஊழலுக்கு மூளையாக இருந்த அனில்தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்க கூடாது என மும்பை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்து உள்ளது.
ஜாமீன் மனு
அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த நவம்பர் மாதம் முன்னாள் உள்துறை மந்திரி அனில்தேஷ்முக்கை கைது செய்தது. அவரது ஜாமீன் மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்தநிலையில் அனில்தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரூ.4.70 கோடி வசூல்
 பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சச்சின் வாசேயை உள்துறை மந்திரியாக இருந்த போது அனில் தேஷ்முக் பலமுறை அவரது அரசு பங்களாவுக்கு அழைத்து இருக்கிறார். அப்போது அவர் பார் மற்றும் ஓட்டல்களில் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தர தொடர்ந்து வற்புறுத்தினார். சச்சின் வாசே ஓட்டல், பார்களில் இருந்து ரூ.4.70 கோடியை வசூலித்து அதை அனில்தேஷ்முக்கின் உதவியாளர் குந்தன் ஷிண்டேவிடம் ஒப்படைத்து இருக்கிறார். 
பின்னர் அந்த பணம் ஹவாலா மூலம் நன்கொடையாக அனில்தேஷ்முக் குடும்பத்தினர் நிர்வகிக்கும் கல்வி அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மூளையாக இருந்தவர்
இந்த ஒட்டுமொத்த திட்டத்தையும் மகன் ரிஷிகேஷ் தேஷ்முக், சச்சின் வாசே, சஞ்சீவ் பாலன்டே, குந்தன் ஷிண்டேவுடன் சேர்ந்து தீட்டி மூளையாக இருந்தவர் அனில்தேஷ்முக். பார், ஓட்டல் உரிமையாளர்களிடம் இருந்து பணம் வசூலிக்க மூளையாக இருந்தவர் அனில்தேஷ்முக். இதேபோல சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை பாதிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story